ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது

தஞ்சை ஜன. 28: ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தஞ்சை மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர் கணபதி நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மாவட்டக்குழு கூட்டம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் நீலமேகம் முன்னிலை வகித்து, தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மத்தியக்குழு உறுப்பினர் சம்பத் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாவட்டச் செயலாளர் நீலமேகம் கூறியதாவது, “தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனை எதிர்த்து டெல்டா மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் கடும் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், மக்கள் விருப்பத்திற்கு மாறாக சோதனைக்கிணறு தோண்டப்படும். இதற்கு பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தவோ, சுற்றுச் சூழல் துறை அனுமதி பெறவோ தேவையில்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலமாக கொல்லைப்புற வழியாக உள்ளே புகுந்து கொஞ்சம்கொஞ்சமாக இத்திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற முயற்சிக்கிறது. தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு மாறாக, மாநில அரசின் உரிமைகளை மீறும் வகையில் இது உள்ளது. எனவே தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். பொதுமக்கள் கருத்து கேட்காமலும், சுற்றுச் சூழல் துறை அனுமதி பெறாமலும் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது. மக்கள் விருப்பத்திற்கு மாறாக, பேரழிவு திட்டமான ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் ஆகியவற்றை தமிழகத்தில் அனுமதிக்க் கூடாது.

காவிரிப் படுகையை பாதுகாக்க விவசாயிகள், அனைத்து தரப்பு மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும். இன்று குடியரசு தினத்தன்று அனைத்து ஒன்றியங்களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒத்த அமைப்புகளுடன் இணைந்து, சிஏஏ, என்ஆர்சி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் இதில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகிறோம்.

மேலும், குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு, அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட இருக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது’ என தமிழக அரசை வலியுறுத்தும் தீர்மானங்களை ஜனநாயக அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் நிறைவேற்றவேண்டும். இதேபோல் ஜன.30ம் தேதி காந்தியடிகள் நினைவு தினத்தன்று, மக்கள் கூடும் இடங்களில் வர்க்க வெகுஜன அமைப்புகள், ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன், தோழமைக் கட்சிகளுடன் இணைந்து “மனிதச் சங்கிலி இயக்கம்” நடத்திடவும், தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது” என்றார். இக்கூட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: