சேதுபாவாசத்திரம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

சேதுபாவாசத்திரம், ஜன. 28: சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். அதிமுக உறுப்பினர் மதிவாணன் பேசும்போது, உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி ரூ.10 லட்சத்துக்கு குறையாமல் இருந்தால் தான் ஓரளவு அடிப்படை வசதிகளை செய்ய முடியும் என்றார். அருள்நம்பி பேசும்போது, அறுவடை செய்த நெல் விற்பனை செய்ய முடியாமல் இடைத்தரகர்களை நாட வேண்டியுள்ளது. எனவே உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும் கொளக்குடி ஊராட்சி பூலான்கொல்லை மிகவும் பின்தங்கிய பகுதியாகும். அந்த பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பிரதம மந்திரி வீடுகள் அதிகளவில் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திமுக உறுப்பினர் பாமா: ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு 49 ஆண்டுகளை கடந்து விட்டது. மிகவும் பழமையான கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம்: நிதி ஒதுக்கீடு கிடைக்கும் அளவை பொறுத்து உறுப்பினர்களுக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு நிதி ஒதுக்கி தரப்படும். பூலான்கொல்லை பகுதிக்கு இந்த நிதியாண்டில் முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார். இதையடுத்து கூட்டத்தின் முதல் தீர்மானமாக அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரமேஷ் நன்றி கூறினார்.

Related Stories: