மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு

சேலம், ஜன.28: சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் தொடர்பாக 70 குழுவினர் இன்றும், நாளையும் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்கின்றனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக, சேலம் மாவட்டத்தில் 12 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 2 நகராட்சிகள், 31 பேரூராட்சிகள், 19 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 374 ஊராட்சிக்கு உட்பட்ட 5,040 குடியிருப்புகளுக்கு நாள்தோறும் 174.56 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட வேண்டியுள்ளது. தற்போது, நாள்தோறும் சராசரியாக 160 முதல் 165 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 26.25 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.இந்த கூட்டுக்குடிநீர் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் தலைமையில், 130 வாரிய பொறியாளர்கள், 20 நீர்பகுப்பு ஆய்வாளர்கள் மற்றும் நில நீர் வல்லுனர்கள் அடங்கிய 70 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இக்குழுவினர், சேலம் மாவட்டத்தில் 12 கூட்டுக் குடிநீர் திட்டங்களில் உள்ள, 410 தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டிகள் மற்றும் 5,112 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர், நிர்ணயக்கப்பட்ட அளவு வழங்கப்படுகிறதா என இன்றும் (28ம் தேதி), நாளையும் (29ம் தேதி) ஆய்வு மேற்கொள்கின்றனர். கூட்டுக்குடிநீர் திட்டங்களின் மூலம் வழங்கப்படும் குடிநீரின் அளவுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அந்தந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் ஆய்வு குழுவிடம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இக்குழுவிடம் குறைபாடுகளை தெரிவிக்க இயலாதவர்கள், சேலம்-நாமக்கல் வட்ட அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவனிடம், 0427-2907351 என்ற தொலைபேசி மூலம் குறைகளை தெரிவிக்கலாம்.
மேலும் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீரின் தரத்தை பரிசோதிக்க அமைக்கப்பட்டுள்ள, நீர்பகுப்பு ஆய்வாளர் மற்றும் நிலநீர் வல்லுனர்களை கொண்ட 10 குழுக்கள், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் மாதிரிகளை எடுத்து பரிசோதனை மேற்கொள்ள உள்ளார்கள்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன், பொறியியல் இயக்குநர் ராமசந்திரன் மற்றும் சேலம் மேற்பார்வைப் பொறியாளர் சந்திரசேகர் ஆகியோர் ஆய்வுக் குழுவினரின் செயல்பாடுகளை கண்காணிப்பாளர்கள். ஆய்வின் முடிவில், மாவட்ட கலெக்டர் ராமனுடன் கலந்து ஆலோசித்து, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

Tags : district ,
× RELATED அரசு பள்ளியில் திமுக மாவட்ட கவுன்சிலர் ஆய்வு