ஓமலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன தணிக்கையில் ₹87,000 அபராதம் வசூல்

ஓமலூர்,  ஜன.28:  ஓமலூரில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், விதிமீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு  அபராதம் விதிக்கப்பட்டு ₹87 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில், விபத்துக்களை  தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  அதிகாலையில் தூக்க கலக்கத்தில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் விழிப்புணர்வை, நேற்று அதிகாலை ஓமலூர் அருகேயுள்ள சுங்கச்சாவடியில்  ஏற்படுத்தினர். அப்போது வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர். காலை நேரத்தில்  இருசக்கர வாகன ஓட்டிகள், கார் ஓட்டுனர்கள் அஜாக்கிரதையாக ஹெல்மெட்  அணியாமலும், சீட் பெல்ட் அணியாமலும் வாகனங்களை ஒட்டி வருகின்றனர். இது  மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கனரக வாகன ஓட்டிகள் இரவு  முழுவதும் தூங்காமல் தொடர்ந்து வாகனங்களை ஓட்டுவதால், தூக்க கலக்கத்தில்  விபத்துக்கள் ஏற்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 
இதனிடையே  அதிகாலை நேரத்தில், பல்வேறு வாகனங்கள் விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றி  செல்லுதல், தகுதியற்ற வாகனங்களை இயக்குதல், சாலை விதிகளை  மீறி இயக்குதல், வாகன பதிவு மற்றும் வாகன இயக்க தகுதி சான்று பெறாமல்  இயக்குதல் போன்ற விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களை பிடித்து அபராதம்  விதிக்கப்பட்டது. அதன்படி, நேற்று ஒரேநாளில் மட்டும் 22 வாகனங்களுக்கு ₹87  ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. இந்த வாகன தணிக்கையில், சேலம்  மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Tags : Omalur ,
× RELATED பிளஸ் 2 பொதுத்தேர்வு 37,387 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்