தலைவாசலில் ₹1000 கோடியில் கால்நடை பூங்கா அமைக்க பிப்.7ம் தேதி கால்கோள் விழா

ஆத்தூர், ஜன.28:  தலைவாசலில் ₹1000 கோடி மதிப்பீட்டில் கால்நடை பூங்கா அமைக்கும் பணிக்கான கால்கோள் விழா முன்னேற்பாடு பணிகளை கால்நடைத்துறை  இயக்குனர் மற்றும் செயலாளர் நேரில் ஆய்வு செய்தனர்.

தலைவாசல் அருகே உள்ள நத்தக்கரை பகுதியில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், ₹1000 கோடி மதிப்பீட்டில்  ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மையம் ஆயிரத்து 66 ஏக்கர் பரப்பளவில் 3 பிரிவுகளாக செயல்படுத்தப்படுகிறது. இதையடுத்து, கால்நடை பூங்கா அமைப்பதற்கான கால்கோள் விழா வரும் மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று கால்நடைத்துறை இயக்குனர் ஞானசேகரன், கால்நடைத்துறை செயலாளர் கோபால் ஆகியோர், கால்நடை பூங்கா அமைய உள்ள இடம் மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி மையம் அமைய உள்ள இடங்கள் உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், விழா மேடை மற்றும் பந்தல், பொதுமக்கள் அமரும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, கலெக்டர் ராமன், கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தர் பாலச்சந்திரன், ஆத்தூர் கோட்டாட்சியர்  துரை மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: