×

சேலத்தில் வேகமாக பரவுகிறது தொண்டை அடைப்பான் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

சேலம், ஜன.28:  சேலத்தில் வேகமாக பரவும் தொண்டை அடைப்பான் நோய் தடுப்பு நடவடிக்கைகளில், தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர்  தொண்டை அடைப்பான் நோயால் கல்லூரி மாணவி பாதிக்கப்பட்டார். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவி படிக்கும் கல்லூரி, வீடு ஆகிய பகுதியில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி, மருந்துகள் அளிக்கப்பட்டது.  சேலம் மாவட்டத்தில் இதுவரை தொண்டை அடைப்பான் நோய்க்கு 19  பேர் பாதிக்கப்பட்டு, குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு,  பெரிதும் மக்களை தாக்கிய இந்த  நோய்க்கு மருத்துவர்களின் தீவிர முயற்சிகள் காரணமாக முடிவு கட்டப்பட்டது.  இப்படிப்பட்ட நிலையில், சேலத்தில் மீண்டும் தொண்டை அடைப்பான் நோய், வேகமாக பரவுகிறது.  இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள்      நோய் தடுப்பு பணியில்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

டிப்தீரியா என்னும் தொண்டை அடைப்பான் நோயானது, காரின்  பாக்டீரியம் டிப்தீரியா எனும் பாக்டீரியவால் ஏற்படுகிறது. இது  தொண்டைக்கும், அதற்கு  உள்ளேயும் பாதிப்பை ஏற்படுத்தும். தொற்று ஏற்பட்ட சில நாளில்  அதிகப்படியான சதை வளரும். இதனால் சுவாசிப்பதற்கும், உணவு சாப்பிடுவதற்கும்  சிரமம் ஏற்படுகிறது. மேலும், தொண்டை வறட்சி, உடல் தளர்வு காய்ச்சல்  ஏற்படும். இந்த நோய் தாக்கியதும் தொண்டை வலி, சளி, வறட்டு இருமல்  ஏற்படும்.   சிலருக்கு மூச்சு விட சிரமம் ஏற்படும். தொண்டை,  கழுத்து பகுதியில் சதை வளருவதால் வீக்கம் காணப்படும். சளி வரும் போது  ரத்தக்கசிவு ஏற்படும். இந்த நோய் அதிகமாக மூச்சு காற்றால் தான் பரவ கூடியது.  இது ஒரு அபயகாரமான நோய் என்றாலும், இதற்கான சிகிச்சைகள் அளிப்பதன் மூலம்  காப்பாற்ற முடியும். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்,  அவர்களுடன் இருப்பவர்களும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என கண்டறியப்படும்.  தொடர்ந்து, அவர்களுக்கு தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள்   அளிக்கப்படும். இந்த நோய்க்கு உரிய சிகிச்சை பெறாமல் இருந்தால் 10 முதல்  20 சதவீதம் வரை உயிரிழப்பும் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு  பிரச்னை, இதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே தொண்டை அடைப்பான் நோய் குறித்த அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Tags : Salem ,
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை