×

அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தொடரும் சிக்கல்

நாமக்கல், ஜன.28:  நாமக்கல் அருகே, அலங்காநத்தத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என கூறி, ஜல்லிக்கட்டுக்கு அதிகாரிகள் தடை விதித்த நிலையில்,  ஜல்லிக்கட்டு நடத்தும் இடத்தை மாற்ற வேண்டும் என கலெக்டரிடம் விவசாயி மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அருகே அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர். நேற்று அங்கு ஜல்லிக்கட்டு நடத்த அளிக்கப்பட்ட அனுமதியை, வருவாய்த்துறையினர் ரத்து செய்தனர். போட்டி நடைபெறும் மைதானத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. வரும் 30ம் தேதிக்குள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தால், போட்டி நடத்த அனுமதி அளிக்கப்படும் என வருவாய்த்துறையினர் விழாக்குழுவினரிடம் கூறியிருந்தனர். இந்த நிலையில் நேற்று, அலங்காநத்த்தை சேர்ந்த மாரியப்பன் என்ற விவசாயி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு விபரம்:
அலங்காநத்தம் தோப்பு தோட்டத்தில் வசிக்கிறேன். எனது காட்டுக்கு அருகேயுள்ள கோவில் காட்டில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எனது விவசாய தோட்டத்தில் 1 ஏக்கரில் மல்லிகை பூச்செடிகள் பயிரிட்டுள்ளேன். அது எங்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது.

தற்போது பூக்கள் பூக்கும் தருவாயில் உள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு நடந்தால் காளைகள் செடிகளை நாசம் செய்து விடும். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தற்போது அலங்காநத்தம் கோவில் காட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதே போல பொட்டிரெட்டிப்பட்டியிலும், ஜல்லிக்கட்டு நடத்த 2 விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் கலெக்டரிடம் மனு அளித்தனர். தற்போது அதே பானியில் அலங்காநத்தத்திலும் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த பிரச்னைகளை சரி செய்து, வரும் 30ம் தேதிக்குள் ஜல்லிக்கட்டு நடத்தும்படி விழாக்குழுவினருக்கு வருவாய்த்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா