×

அதிமுக பிரமுகர் ஆசியுடன் டாஸ்மாக் கடை கள்ளத்தனமாக மதுவிற்ற 2 பேர் கைது

திருச்செங்கோடு, ஜன.28: திருச்செங்கோட்டில்  அதிமுக பிரமுகர் ஆசியுடன் கள்ளத்தனமாக இயங்கி வந்த டாஸ்மாக் கடையில்,  சின்ராஜ் எம்பி திடீர் சோதனை நடத்தியதில், ₹1.50 லட்சம் மதிப்புள்ள  மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது  செய்தனர். திருச்செங்கோடு கருவேப்பம்பட்டியில் இயங்கி வரும் ஒரு உணவு  விடுதியின் பின்புறம், கள்ளத்தனமாக மதுபானங்கள் பதுக்கி  வைத்து விற்கப்படுவதாக தகவல்  கிடைத்தது. இதனையடுத்து, நாமக்கல் எம்பி சின்ராஜ், கொமதேக நிர்வாகிகளுடன்  அங்கு திடீர் சோதனை மேற்கொண்டார். இந்த சோதனையில், டாஸ்மாக் மதுபானங்கள்  பெட்டி பெட்டியாக கைப்பற்றப்பட்டது. உணவு விடுதியின் உள்ளே பார் வைத்து  நடத்துவதும் தெரியவந்தது. இந்த பாரில் காலை 8 முதல் இரவு 12 மணிவரை  டாஸ்மாக் சரக்குகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், பாட்டிலுக்கு ₹30 அதிகம்  வைத்து விற்றதும் தெரியவந்தது. இந்த இடம் நாமக்கல் மாவட்டத்தில் உயர்ந்த  பதவியில் இருக்கும் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான இடம் என்று  கூறப்படுகிறது.

இதனை அடுத்து, நாமக்கல் எம்பி  சின்ராஜ் போலீசாருக்கு  தகவல் கொடுத்து,  கைப்பற்றப்பட்ட மது பானங்களைஒப்படைத்தார். கடையின்  உரிமையாளர் லோகேஸ்வரன் (45),  பணியாளர் பாலமுருகன் (27)  ஆகியோரை போலீசார் கைது   செய்தனர். இதுகுறித்து திருச்செங்கோடு புறநகர போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதுகுறித்து நாமக்கல் எம்பி  சின்ராஜ் கூறுகையில், ‘கருவேப்பம்பட்டியில், சட்டத்திற்கு புறம்பாக இயங்கி  வந்த மதுபான கடை, அதனுடன் இணைந்து உள்ள பாரையும் பிடித்து, போலீசிடம்  ஒப்படைத்து உள்ளோம். இந்த கடையில் தடை செய்யப்பட்ட குட்கா வைத்து விற்பனை  செய்யப்பட்டது தெரியவந்தது. குடியரசு தினமான நேற்று சுமார் ஒரு லட்சத்து 80  ஆயிரம் ரூபாய்க்கு  மதுபானங்களை கள்ளத்தனமாக விற்றுள்ளனர். இவர்கள் மீது  குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரை கேட்டுக்  கொண்டுள்ளேன். பொதுமக்கள் எங்களுக்கு உறுதுணையாக இருந்து இதுபோன்ற  சம்பவங்கள் நடப்பதை தெரிவிக்க வேண்டும்,’ என்றார்.

கைப்பற்றப்பட்ட  மதுபானங்களின் மதிப்பு சுமார் ₹1.50 லட்சம் ஆகும். பண்டல் பண்டலாக அரசு  மதுபானங்கள், அனுமதி இல்லாத பாரில் கிடைத்தது அதிர்ச்சியடைய  வைத்துள்ளது. இவர்களுக்கு சப்ளை செய்த டாஸ்மாக் கடை பணியாளர்களை கண்டறியும்  நடவடிக்கை துரிதமடைந்துள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும்  என்று கூறப்படுகிறது.

Tags : men ,
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்