×

பரமத்தி நகருக்குள் வராமல் பைபாஸ் சாலையில் சென்ற தனியார் பஸ்கள் சிறை பிடிப்பு

பரமத்திவேலூர், ஜன.28: பரமத்தி நகருக்குள் வராமல் பைபாஸ் சாலையில் சென்ற தனியார் பஸ்களை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி நகரம் உள்ளது. இங்கு பல்வேறு அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. பரமத்தியில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர், கல்வி மற்றும் பணி நிமித்தம் வெளியூர்களுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் தனியார் பஸ்களில், பரமத்தி செல்லும் பயணிகளை ஏற்ற கண்டக்டர்கள் மறுக்கின்றனர். மேலும், இந்த பஸ்கள் பரமத்தி நகருக்குள் வராமல், பைபாஸ் (புறவழி) சாலையில் செல்வதால், பரமத்திக்கு வரும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதேபோல், ஒருசில அரசு பஸ்களும் பரமத்தி நகருக்குள் வராமல் புறவழிச்சாலையில் செல்கின்றன. இதனால், பரமத்தியிலிருந்து நாமக்கல், கரூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள், பஸ் இல்லாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு நாமக்கல்லில் இருந்து பரமத்திக்கு வரவேண்டிய சில பயணிகள், தனியார் பஸ்சில் ஏறியுள்ளனர். அப்போது, பரமத்தி நகருக்குள் பஸ் செல்லாது என கூறிய கண்டக்டர், அவர்களை பஸ்சிலிருந்து இறக்கி விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, அந்த பஸ் பரமத்தி நகருக்கு வரும்போது பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்சை காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.  இதனைத் தொடர்ந்து பின்னால் வந்த மற்றொரு தனியார் பஸ்சையும் பொதுமக்கள் சிறைபிடித்னர். அப்போது, பர்மிட் இருந்தும் பரமத்தி நகருக்குள் வந்து செல்லாத அனைத்து பஸ்களும், நகருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து பரமத்தி நகருக்குள் வந்து செல்ல அனுமதி பெற்றுள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பஸ்களும், நகருக்குள் வந்து செல்ல வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதைடுத்து  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Bypass Road ,
× RELATED டிரைவர் மீது தாக்குதல்