×

வேளாண்மை அறிவியல் மையத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி கருத்தரங்கு

கிருஷ்ணகிரி, ஜன.28: எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மையத்தில், தோட்டக்கலை பயிர் சாகுபடி விளக்க விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் நடந்தது. கிருஷ்ணகிரி அருகே எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தில், தோட்டக்கலை பயிர் விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டுத் கருத்தரங்கம் நடந்தது. வேளாண்மை அறிவியல் மையத்தின் தலைவர் சுந்தர்ராஜ் வரவேற்புரையாற்றி, கருத்தரங்கின் முக்கியத்துவம் மற்றும் தோட்டக்கலை பயிர்களான மா மற்றும் கொய்யாவில் பூச்சி -நோய் மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்களை விளக்கி கூறினார். தேசிய தோட்டக்கலை வாரியத்தின் துணை இயக்குநர் சரத்காடு, தோட்டக்கலை பயிர் அபிவிருத்திக்கு தேசிய தோட்டக்கலை வாரியத்தின் பங்கு மற்றும் மானியத் திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இந்த கருத்தரங்கில், முன்னோடி வங்கி மேலாளர் பாஸ்கர் பங்கேற்று, விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்களுக்கு வங்கியில் வழங்கப்படும் கடனுதவி திட்டங்களை விளக்கினார். நபார்டு வங்கியின் மாவட்ட மேம்பாட்டு மேலாளர் நஸ்ரின் சலீம், தோட்டக்கலை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்தல் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். மேலும், பையூர் மண்டல ஆராய்ச்சி மையத்தின் உதவி பேராசிரியர் ஸ்ரீவித்யா, மா அடர் நடவு முறை, உர மேலாண்மை, பழ ஈ மேலாண்மை குறித்து பயிற்சி வழங்கினார்.

வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்(தோட்டக்கலை) ரமேஷ்பாபு, கொய்யா சாகுபடியில் உயர் மகசூல் பெற உதவும் தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார். வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்(மனையியல்) பூமதி, மா மற்றும் கொய்யாவில் மதிப்புக்கூட்டுதல் பயிற்சியினை வழங்கினார். இந்த கருத்தரங்கில் கம்மம்பள்ளி, மகாராஜகடை, சாலமரத்துப்பட்டி, மேலகசின்னம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தோட்டக்கலை விவசாயிகள் 50 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்(வேளாண் விரிவாக்கம்) செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags : Horticulture Cultivation Seminar ,Center for Agricultural Sciences ,
× RELATED தொடர் மழையில் இருந்து நெல், பருத்தி...