படியூர் அரசுப் பள்ளியில் எல்ேகஜி, யுகேஜி வகுப்பு துவங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காங்கயம், ஜன.28: காங்கயம் ஒன்றியம், திருப்பூர் சாலையில் உள்ள படியூர் ஊராட்சியில் அரசு துவக்கப்பள்ளி 150 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் வளாகத்தில் உள்ள மற்றொரு கட்டடத்தில் கல்வித்துறை அதிகாரிகளின் அனுமதியோடு, இப்பகுதி மக்களின் பங்களிப்பில் 46 சிறுவர், சிறுமியர் படித்து வரும் மழலையர் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இங்கு கற்றுக் கொடுப்பதற்கு 2 ஆசிரியைகளும், ஒரு ஆயாவும் பணியாற்றி வருகின்றனர். இங்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆயாவுக்கு இதில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரே அவர்களுக்கு பணம் வசூல் செய்து, கொடுத்து வருகின்றனர்.காலை 10 மணிக்குத் துவங்கி, மாலை 4 மணிக்கு முடியும் இந்த மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வசதியில்லாததால், மாணவர்களின் பெற்றோரே மதியம் உணவு கொண்டு வந்து தருகின்றனர். எனவே, இந்த வசதியற்ற ஏழைக் குழந்தைகளின் வருங்கால நலன் மற்றும் கல்வியைக் கருத்தில் கொண்டு, இந்த மழலையர் வகுப்புகளை அரசே எடுத்து நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Related Stories: