×

மக்காச்சோளத்திற்கு ஆதார விலை

திருப்பூர், ஜன.28: கட்சி  சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் காளிமுத்து  கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்  பெய்த தொடர் மழையால் குளம், குட்டை, வாய்க்கால், ஆறு ஆகியவற்றில்  தேக்கமும், தொடர் நீரோட்டம் இருந்ததால் விவசாயிகள் அதிகளவு மக்காச்சோளம்  பயிரிட்டனர். தற்போது அறுவடை தருவாயில் உள்ளது. இந்நிலையில், இறைச்சிக்கோழி  உற்பத்தியாளர்கள் சிண்டிகேட் அமைத்து தமிழக விவசாயிகளிடம்  மக்காச்சோளத்தை அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளனர். வெளிமாநிலங்களிலிருந்து  பல லட்சம் டன் மக்காச்சோளத்தை வலியச்சென்று ரயில்கள், ஆயிரத்துக்கும்  மேற்பட்ட லாரிகளில் இறக்குமதி செய்கின்றனர்.  கடந்த சில மாதங்களுக்கு  முன்புவரை ஒரு  குவின்டால் ரூ.2,600 முதல், ரூ.2,700  வரை விற்கப்பட்ட  மக்காச்சோள விலை அறுவடை செய்யும் நிலையில்  தற்போது ரூ.1,950க்கு  குறைந்துள்ளது. ஏக்கருக்கு, 25 மூட்டை அளவுக்கு விளைச்சல் இருந்தாலும்,  விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.கோழித்தீவனம், கால்நடை கலப்பு  தீவனம் மற்றும் மக்காச்சோளத்தில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்களை  உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ‘சிண்டிகேட்’ அமைத்து, விலையை  குறைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இறைச்சிக்கோழி  உற்பத்தியாளர்கள் , மாட்டு தீவனம் உற்பத்தியாளர்கள்   வெளிமாநிலங்களிலிருந்து மக்காச்சோளம் இறக்குமதிக்கு தற்காலிகமாக தமிழக அரசு  தடை விதித்து உள்ளூர் மக்காச்சோளத்திற்கு  குவின்டாலுக்கு  ரூ.3 ஆயிரம்  ஆதார விலையாக நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை  எடுக்க வேண்டும்.


Tags :
× RELATED கமுதி அருகே மழையால் வீணான...