×

மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட வைப்புத்தொகையை குறைக்கக்கோரி வியாபாரிகள் கடையடைப்பு

மேட்டுப்பாளையம், ஜன.28: மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட வைப்புத்தொகையை குறைக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் என்றும் வற்றாத ஜீவ நதியாம் பவானி ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு 16க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் நகராட்சி ,பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீரால் பவானி ஆறு மாசுபட்டு அதன் இயற்கைத் தன்மையை இழந்து வந்தது. பவானி ஆற்று நீர் மாசுபடுவதை தடுக்க தமிழக அரசு சார்பில் ரூ. 97 கோடியே 70 லட்சம் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை திட்ட பணிகளால் மேட்டுப்பாளையம் நகராட்சி 33 வார்டுகளிலும் உள்ள சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் வாகன போக்குவரத்து நெரிசலும், விபத்தும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை திட்டத்தில் குறைந்தபட்சம் 500 சதுர அடிக்கு கீழே உள்ள கட்டிட அளவிற்கு ரூ. 5 ஆயிரம் வைப்புத் தொகையாகவும், ரூ. 100 மாதாந்திர கட்டணமாகவும், அதிக பட்சமாக 2401 சதுர அடிக்கு மேலே உள்ள கட்டிட அளவிற்கு குறைந்தபட்சம் ரூ.12 ஆயிரத்து 500 வைப்புத் தொகையும், குறைந்தபட்சம் ரூ.160 மாதாந்திர கட்டணம் என்றும் குடியிருப்பு அல்லாத பிற உபயோக பகுதிகளுக்கு அந்த தொகை மூன்று மடங்கு எனவும் அறிவிப்பு செய்தது.

இந்த கட்டண நிர்ணயம் ஏழை, எளிய மக்களை மிகவும் பாதிப்படைய செய்வதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் மக்கள் நல பேரவை மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக பாதாள சாக்கடை திட்ட வைப்புத்தொகை மற்றும் மாதாந்திர கட்டணத்தை குறைக்கக்கோரியும், திருப்பூர் 4 வது குடிநீர் திட்டத்திற்கான தண்ணீரை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து எடுக்காமல் பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியில் எடுக்கக்கோரியும் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவது மற்றும் ஆட்சேபனை மனு அளிப்பது எனவும் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் , வணிக வளாகம் மற்றும் நகரில் முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.மக்கள் நலப் பேரவை அமைப்பாளர் டி.டி. அரங்கசாமி தலைமையில் பொது நல அமைப்பினர் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் சென்று நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமாரிடம் ஆட்சேபனை மனு அளித்தனர். அப்போது  நகராட்சி  ஆணையர் மற்றும் பொதுநல அமைப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Merchants ,Mettupalayam Municipality ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...