×

கணவரை விடுதலை செய்யாவிட்டால் என்னை கருணை கொலை செய்யுங்கள்

கோவை, ஜன. 28:  கோவை பெட்ரோல் பங்கில் பெண்கள் உடை மாற்றும் அறையில் வீடிேயா எடுக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தனது கணவரை விடுதலை செய்ய வேண்டும் அல்லது தன்னை கருணை கொலை செய்ய வேண்டும் என அவரது மனைவி, கலெக்டரிடம் மனு அளித்தார்.கோவை மாநகர் சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் கம்பெனிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் ஏராளமான பெண்கள் வேலை செய்கின்றனர்.
அவர்கள் வேலை முடிந்து செல்லும்போது உடை மாற்றுவது வழக்கம். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த அறையில் பெண்கள் உடை மாற்றுவதை ரகசியமாக தனது செல்போன் கேமராவை வைத்து படம் பிடிக்கப்பட்டது. இந்த செயலில் பங்கில் பணியாற்றிய சுபாஷ் என்பவர் ஈடுபட்டார். மேலும், இதை ரகசியமாக தனது செல்போனுக்கு அங்கு பணிபுரிந்த மணிகண்டன் என்பவர் மாற்றிக் கொண்டார். பின்னர், அதனை மருதாசலம் என்பவர் உதவியுடன் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவ விட்டுள்ளனர்.இது தொடர்பாக சாய்பாபா காலனி போலீசில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரிலும், கோவை மாநகர ஆணையர் சுமித் சரண் உத்தரவின் பேரிலும், மணிகண்டன், சுபாஷ் மற்றும் மருதாசலம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே கோவை ரத்தினபுரியை சேர்ந்த சவிதா (மணிகண்டனின் மனைவி) மாவட்ட கலெக்டர் ராஜாமணியிடம் நேற்று ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: எனது கணவரும், நானும் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பணிபுரிந்தோம். அப்போது அங்கு பணிபுரிந்த சுபாஷ், பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை தனது செல்போனில் ரகசியமாக படம் பிடித்தார்.
இதனை நானும், எனது கணவரும் கண்டுபிடித்து புகார் அளித்தோம். இந்த நிலையில் பெண் ஊழியர்கள் உடை மாற்றும் வீடியோவை சிலர் சமூக வலைத்தளத்தில் பரப்பினர். அந்த நபர்களுக்கு எனது கணவர்தான் வீடியோ வழங்கியதாக குற்றஞ்சாட்டி போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டு உள்ளது. ஆபாச வீடியோ குறித்து புகார் அளித்த என் கணவரை தற்போது பொய்யான குற்றம் சுமத்தி சிறையில் அடைத்து உள்ளனர். அவரை விடுதலை செய்ய வேண்டும் இல்லையென்றால் என்னை கருணை கொலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Tags :
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்