×

சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு

மொடக்குறிச்சி,  ஜன. 28:   கொடுமுடி ஒன்றியத்துக்குட்பட்ட  ஆவுடையார் பாறையில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இந்த ஊரில் யாராவது இறந்தால் அவர்களை அடக்கம் செய்வதற்காக கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு அரசு சுடுகாட்டிற்கு சடலங்களை  கொண்டு செல்வதற்காக பாதை அமைத்துக் கொடுத்தது. இந்நிலையில் கடந்த 30  ஆண்டுக்கு முன்பு சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையையொட்டி உள்ள தோட்டத்து உரிமையாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதனால் சடலத்தை கொண்டு செல்ல முடியாமல் பாதை சுருங்கி விட்டது. இதனால்  4 பேர் சுமந்து செல்கின்ற சடலத்தை இருவர் மட்டுமே முன்பின் ஆக சுமந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமித்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பாதையை தனியாரிடம் இருந்து மீட்டு தரவேண்டும் என அப்பகுதியை  சேர்ந்த பொதுமக்கள் பலமுறை அரசுக்கு மனு அளித்தனர். ஆனால்  இது குறித்து மாவட்ட நிர்வாகம், கொடுமுடி தாசில்தார் ஆகியோர் இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மொடக்குறிச்சி  சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை தனியாரிடமிருந்து மீட்டு  தரவேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை  விடுக்க உள்ளனர். கோரிக்கை விடுத்தும் பாதையை அரசு மீட்டு தரவில்லை என்றால், சடலத்தை வைத்து போராட்டம்  நடத்தப்படும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...