சாதி சான்றிதழ் வழங்க மறுக்கும் வருவாய்த்துறை ஆதிவாசிகள் வேடத்தில் நூதன முறையில் மனு

ஈரோடு, ஜன. 28:  சாதி சான்றிதழ் வழங்க மறுக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து ஆதிவாசிகள் போல வேடமிட்டு நூதனமுறையில் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சீர்மரபினர் சாதி சான்றிதழ் கேட்டு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கும் பொழுது சீர்மரபினர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் சீர்மரபினர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்கும் நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் வருவாய்த்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே அலைக்கழித்து வருவதாக புகார் உள்ளது. இந்நிலையில் கொங்குநாடு வேட்டுவகவுண்டர் முன்னேற்ற சங்கம் மற்றும் சீர்மரபினர் நலச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முனுசாமி தலைமையில் ஏராளமானோர் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்தனர். அப்போது வருவாய்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் அரை நிர்வாணத்தில் இலை, தழைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு ஆதிவாசிகள் போல வேடமிட்டபடி வந்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் இரண்டு நபர்களை மட்டும் மனு கொடுக்க அனுமதித்தனர்.

Related Stories: