கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருட்டு, வழிப்பறி கொள்ளை பாலியல் தொழில் அமோகம்

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தினமும் வழிப்பறி, கொள்ளை, பாலியல் தொழில் போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இதை தடுக்க வேண்டிய போலீசார் கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை நகரின் மிக முக்கிய நுழைவுவாயிலாக கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து நாள்தோறும் ஏராளமான மக்கள் பல்வேறு பணிகள் காரணமாக வெளியூர்களுக்கும், அங்கிருந்து சென்னைக்கும் வந்து செல்கின்றனர். இதனால், பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு மக்களின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி வழிப்பறி கொள்ளை, செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபடுவது, புதியதாக சென்னைக்கு வருபவர்களிடம் வேலை வாங்கித் தருவதாகவும், சினிமாவில் நடிக்க வைப்பதாகவும் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றுவது உள்ளிட்ட செயல்களில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, பாலியல் தொழிலும் கொடிகட்டி பறக்கிறது.   

பாதிக்கப்பட்ட நபர்கள் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். போலீசார் அந்த புகார்களை பெற்று வழக்குப்பதிவு மட்டுமே செய்து வருகின்றனர். ஆனால், இத்தகைய குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் மர்ம கும்பலை பிடிப்பதிலும், கோயம்பேடு பேருந்து நிலையப் பகுதிகளில் தொடர்ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதை கண்டுகொள்வதில்லை. மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் குற்றச்சம்பவங்களை பார்க்கும்போது, அவை அனைத்தும் போலீசார் உடந்தையாக உள்ளனரோ என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.

மேலும் போலீசார் புகார் தரவரும் பொதுமக்களை முன்னுக்குப்பின் முரணாக கேள்வி கேட்டு அவர்களை அலைக்கழிப்பது, பதிவு செய்யும் வழக்குகளை கிடப்பில் போடுவது என மெத்தனமாகவே செயல்படுகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க சுமார் 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் கண்காணித்தாலே, குற்றவாளிகளை விரைந்து கைது செய்திட முடியும். ஆனால், அதை போலீசார் செய்வதில்லை. எனவே, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெறும் தொடர் குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறை உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் அங்கு வரும் பொதுமக்களின் அச்சத்தை களையவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: