×

இ-சேவை மையங்களில் சான்றிதழ் பெற அலைக்கழிக்கப்படும் அவலம் : பொதுமக்கள் குற்றச்சாட்டு

பெரம்பூர்: தமிழகத்தில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தடுக்கவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதை தடுக்கவும் அரசு சார்பில், அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் இ- சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எளிய முறையில் தங்களுக்கான சான்றிதழ்களை பெற்று வந்தனர். இந்நிலையில், அடிக்கடி சர்வர் பழுது, ஊழியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை, கணினி பழுது போன்ற காரணங்களால் சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி மார்க்கெட் பகுதியில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அரசு இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் ஆதார் கார்டில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய இங்கு வராதீர்கள். பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்திற்கு செல்லவும் என எழுதி ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி, பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்துக்கு சென்றால், அங்கு ஒரு நாளைக்கு 30 பேர்தான், அதுவும் காலை 7 மணிக்கே சென்றால்தான் டோக்கன் கிடைக்கும். 30 பேருக்கு மேல் யாருக்கும் டோக்கன் தரப்பட மாட்டாது என வெளியே எழுதி ஒட்டி உள்ளனர்.

ஆதார் கார்டு பெயர் சரிபார்த்தல் உள்ளிட்ட வேலைக்கு  சென்றால் 15 நாட்கள் கழித்து வாருங்கள் எனவும், வருமான சான்று கேட்டால் 10 நாட்கள் கழித்து வாருங்கள் என்றும் அங்குள்ளவர்கள் அலைகழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மூதாட்டி ஒருவர் கூறுகையில், ‘‘நான், வியாசர்பாடியில்  இருந்து வருகிறேன். எனது பெயர்  வேளாங்கன்னி (65). ஆதார் கார்டில் செல்போன் எண் சேர்க்கும்படி கூறினார்கள் அதற்காக வந்தேன். ஆனால் இதுவரை மூன்று முறை இங்கு வந்துவிட்டேன்.  எப்போது வந்தாலும் 10 நாள் கழித்து வா, 20 நாள் கழித்து வா என கூறுகிறார்கள்.
எங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையத்துக்கு சென்றால் இதை  இங்கே செய்ய முடியாது. தாலுகா ஆபீஸில் உள்ள இ-சேவை மையத்துக்கு செல்லுங்கள் என்று கூறுகிறார்கள். இங்கு வந்து பார்த்தால் டோக்கன் சிஸ்டம் என்றும் ஒரு நாளைக்கு 30 பேர் தான் எனவும் கூறுகிறார்கள்.  அது மட்டுமில்லாமல் வயதிற்கு கூட மரியாதை தராமல் நீ வா போ என  பேசுகிறார்கள். யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை. பொதுமக்களின் நலன் கருதி தொடங்கப்பட்ட இந்த இ-சேவை மையங்களை தொடர்ந்து திறமையான அலுவலர்களை வைத்து நடத்தாததால், பொதுமக்கள் அலைகழிக்கப்படுகின்றனர். இதை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும்,’’ என்றார்.

Tags : centers ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!