×

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் வியாபாரிக்கு ஆயுள் சிறை : செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் பூட்டு வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை 2வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அமந்தகரை பி.எச் சாலையை சேர்ந்தவர் இளங்கோ. இவர், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில், சென்னை பி.பி தோட்டம் பகுதியை சேர்ந்த பூட்டு வியாபாரி கதிரவன் என்பவருக்கும், இளங்கோவிற்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அப்போது கதிரவன், இளங்கோவை பார்த்து உனக்கு என் கையால் தான் சாவு, உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன், என்று கூறியுள்ளார். இது சண்டையில் கூறுவது சகஜம் என்று இளங்கோ அலட்சியமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 26.9.2010 அன்று, இளங்கோ அமைந்தகரை பகுதியில் ஒரு கடை முன்பு தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த கதிரவன், அருகில் கிடந்த கல்லை எடுத்து, இளங்கோ தலையில் போட்டுள்ளார். இதனை பார்த்த இளங்கோவின் மாமா பாபு ஓடிவந்துள்ளார். அதற்குள் கதிரவன் தப்பி ஓடியுள்ளார். உடனே ஆம்பூலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அவர்கள் வந்து சோதனை செய்து பார்த்தபோது, இளங்கோ இறந்து தெரிந்தது. இதுகுறித்து, பாபு அமந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து கதிரவனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை 2வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சமினா முன்பு நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் வி.எஸ்.நாராயணராவ் ஆஜராகி வாதிட்டார். பின்னர் வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அதில், இந்த வழக்கில் சாட்சியங்களிடம் நடத்திய விசாரணையில் கதிரவன் குற்றம் செய்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது, என்று கூறி உத்தரவிட்டார்.

Tags : dealer ,
× RELATED உளுந்து வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி