×

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மீது பொய் வழக்கு இன்ஸ்பெக்டர்களுக்கு 1 லட்சம் அபராதம்

சென்னை: பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மீது பொய் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர்களுக்கு 1 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா நரசிங்காபுரத்தை சேர்ந்தவர் சிலார்கான். நரசிங்காபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராகவும், நரசிங்காபுரம் வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத்தலைவராகவும் இருந்து வந்தார். இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கடந்த 2013ம் ஆண்டு ஒரு புகார் சம்பந்தமாக காலை 7 மணிக்கு வீட்டில் இருந்த என்னை அப்போதைய ஆத்தூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் சம்பத்குமார், தீவட்டிப்பட்டு இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது இன்ஸ்பெக்டர்கள் இருவரும் கையில் லத்தியை வைத்து அடித்தும், தவறான வார்த்தைகளை பயன்படுத்தியும், மதம் தொடர்பாக இழிவாக பேசியும் துன்புறுத்தினர். மேலும், பொய் வழக்கு பதிவு செய்து, என்னை கைது செய்தனர். எனவே மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி துரை ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையில் இன்ஸ்பெக்டர்கள் சம்பத்குமார், கண்ணன் ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. இதற்காக அவர்களுக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்திற்குள் வழங்கிவிட்டு, இன்ஸ்பெக்டர்கள் 2 பேரிடம் இருந்து தலா ₹50 ஆயிரம் வசூல் செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Inspectors ,parents ,
× RELATED நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 174 பதற்றமான வாக்குசாவடிகள்