மூலக்கடை சந்திப்பு அருகே சாலை நடுவில் உள்ள மின்கம்பங்களால் விபத்து

பெரம்பூர்: மூலக்கடை அருகே மாதவரம் நெடுஞ்சாலை நடுவில் உள்ள மின் கம்பங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்து பீதியில் பயணிக்கின்றனர். பெரம்பூர்  ரயில் நிலையத்தில் இருந்து மூலக்கடைக்கு செல்லும் மாதவரம் நெடுஞ்சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் நெரிசல் மிகுந்து காணப்படும். இச்சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போது, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. அதை தொடர்ந்து, சாலை பணி நடைபெற்றது. ஆனால், மூலக்கடை சந்திப்பு அருகே சாலையின் நடுவில் இருந்த 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை இதுவரை அகற்றி, சாலையோரம் அமைக்கவில்லை. தற்போது, மின்கம்பங்கள் நடுரோட்டில் உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் மின் கம்பம் நடுரோட்டில் உள்ளதை அறியாத பல வாகன ஓட்டிகள் மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை சாலை நடுவில் உள்ள மின் கம்பங்களை அகற்றி, சாலையோரம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சாலை விரிவாக்க பணி மேற்கொண்ட அதிகாரிகள், இதுவரை சாலை நடுவில் உள்ள மின் கம்பங்களை அகற்றி, சாலையோரம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டும் பலனில்லை. தற்போது, இந்த மின்கம்பங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த மின் கம்பங்கள் எப்போது அகற்றப்பட்டு சாலை ஓரத்தில் வைக்கப்படுமோ அப்போதுதான் இந்த சாலையை முழுமையாக வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியும். தற்போது, சாலை நடுவில் மின்கம்பம் அமைந்துள்ள பகுதியை சிலர் பார்க்கிங் பகுதியாக பயன்படுத்துவதால், பீக் அவர்சில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனை போலீசாரும் கண்டுகொள்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலை நடுவில் உள்ள இந்த மின்கம்பங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, சாலையோரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: