மெட்ரோ ரயில் நிலையங்களில் இ-பைக் சேவையை அதிகரிக்க திட்டம் : அதிகாரி தகவல்

சென்னை:  சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வாகன வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ சேவையும், 5 நிலையங்களில் ஷேர் டாக்சி சேவையும், 15 நிலையங்களில் வாகன இணைப்பு சேவையும் செயல்பட்டு வருகின்றது. இதேபோல், முழுவதும் மின்சாரத்திலேயே இயங்கும் வகையினாலான இ-பைக் சேவை கிண்டி, ஆலந்தூர், வடபழனி, நந்தனம், சின்னமலை மற்றும் அண்ணாநகர் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘வோகோ’ மற்றும் ‘ப்ளை’ ஆகிய இரண்டு தனியார் நிறுவனத்துடன் இணைந்து இச்சேவையை நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. இந்த சேவைக்கு, நிமிடத்திற்கு 1 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில், இச்சேவைக்கு பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதால் இச்சேவை செயல்படும் மெட்ரோ ரயில் நிலையங்களில் சேவையை இருமடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

பசுமையை மையமாக வைத்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இருசக்கர வாகன திட்டத்திற்கு நாள்தோறும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் இத்திட்டத்தை நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். நிமிடத்திற்கு 1 ரூபாய் மட்டுமே கட்டணம் என்பதால் சேவையை பயன்படுத்த அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 6 இ-பைக்குகள் உள்ளன. இதை 15ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளோம். இதேபோல், இத்திட்டத்தை மேற்கொண்டு பல மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்தவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. எந்தெந்த நிலையங்களில் சேவையை அறிமுகப்படுத்தலாம், எவ்வளவு தூரத்திற்கு சேவையை விரிவுபடுத்தலாம், எந்த இடங்களில் பைக் நிறுத்தங்களை அமைக்கலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், 4 பைக்குகள் உள்ள நிலையங்களில் 8 பைக்குகளாகவும், 5 பைக்குகள் உள்ள நிலையங்களில் 10 பைக்குகளாகவும் பயணிகளின் தேவை கருதி அதிகரிக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: