×

அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் பஞ்சாயத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்

வேலூர், ஜன.28: அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் பஞ்சாயத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ பார்த்திபன், ஆர்டிஓ கணேஷ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இதில் அணைக்கட்டு ஒன்றியம் அகரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 8 கிராமங்களை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், ‘எங்கள் பஞ்சாயத்தில் மொத்தம் 17 கிராமங்கள் உள்ளன. இதில் 6 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். எனவே, அகரம் பஞ்சாயத்தை 2 ஆக பிரித்து எல்லப்பட்டி, சுபேதார்பேட்டை, போடிபேட்டை, எடத்தெரு, அகரராஜாபாளையம், புதுமனை, பழையமனை ஆகிய கிராமங்களை கொண்டு எல்லப்பட்டி பஞ்சாயத்து உருவாக்கவேண்டும். இதன் மூலம் எங்கள் கிராமங்கள் வளர்ச்சி பெறும்'''''''' என தெரிவித்திருந்தனர்.

விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த கோபி அளித்த மனுவில், ‘வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனை பின்புறம் மருத்துவக்கழிவுகள், பொதுக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்களும், மருத்துவ விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். மேயச்சலுக்கு செல்லும் கால்நடைகளும் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

குடியாத்தம் டி.பி.பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாசராபல்லி கிராமத்தை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், ‘எங்கள் கிராமத்தில் 3 முதல் 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். எனவே கிராமம் அருகில் புறம்போக்கு நிலத்தில் 50 வீட்டு மனைகள் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர். குடியாத்தம் அடுத்த கள்ளிப்பேட்டையை சேர்ந்த 30 பேர் கொடுத்த மனுவில், ‘நாங்கள் பல ஆண்டுகளாக சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்தோம். தற்போது அனைவரும் திருந்தி கூலி வேலைகளுக்கு சென்று கொண்டுள்ளோம். எங்களுக்கு வங்கியில் கடனுதவி செய்து கொடுத்தால், தொழில் தொடங்கி பிழைத்து கொள்வோம்’ என்று தெரிவித்திருந்தனர்.

உயிரிழந்த மாற்றுத்திறனாளிகள் 19 பேரின் குடும்பத்தினருக்கு தலா 17 ஆயிரம் என மொத்தம் 3.23 லட்சத்திற்கான நிவாரண நிதிக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கலெக்டர் நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டார். குறைதீர்வு கூட்டத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் மனு அளிக்க வந்தவர்களை தீவிர சோதனைக்கு பிறகே போலீசார் அனுமதித்தனர்.

Tags :
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த 6 காட்டு...