தமிழகம் முழுவதும் தரமான உணவுகளை அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் வழங்க வேண்டும்

வேலூர், ஜன.28: தமிழகம் முழுவதும் கலப்படம் இல்லாத தரமான உணவுகளை அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் வழங்குவதற்காக சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 205 சத்துணவு மையங்கள் இயங்கி வருகிறது. இந்த மையங்கள் மூலமாக தினமும் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சத்துணவுகளை உண்டு வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு சத்தான உணவுகளையும், கலப்படம் இல்லாத தரமான உணவுகளையும் வழங்குவது குறித்து மார்ச் மாதம் இறுதிக்குள் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Advertising
Advertising

அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலமாக அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு மையங்களில், கலப்படம் இல்லாத தரமான உணவுகளை சமைத்து வழங்க வேண்டும். தினமும் சமையல் அறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு சமைத்து வழங்கும் உணவில் இருந்து 150 கிராம் உணவு மாதிரியை கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்க வேண்டும். சத்துணவு வழங்கும்போது, சத்துணவு அமைப்பாளர்கள் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் இந்த விழிப்புணர்வு பயிற்சி நேற்று முதல் தொடங்கியுள்ளது. வரும் மார்ச் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: