ரேஷன் கடையில் அரசு உதவித்தொகை வழங்குவதாக கூறி நூதன முறையில் மூதாட்டியிடம் பணம் மோசடி பள்ளிகொண்டாவில் பரபரப்பு

பள்ளிகொண்டா, ஜன.28: பள்ளிகொண்டாவில் ரேஷன் கடையில் அரசு உதவித்தொகை வழங்குவதாக கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா மாட வீதியை சேர்ந்தவர் லோகம்மாள்(70). இவரது கணவர் இறந்து 15 வருடங்கள் ஆகிறது. கடந்த சனிக்கிழமையன்று புதிய ஆட்கள் சிலர் அவர் வசிக்கும் பகுதிக்கு வந்து அவரை பற்றி விசாரித்தனர். பின்பு அவரது வீட்டிற்கு சென்று அவரிடம் உங்கள் கணவர் இறந்ததற்கு தமிழக அரசின் சார்பில் நீங்கள் வாங்கும் ரேஷன் கடையில் 10ஆயிரம் போடப்பட்டுள்ளது. அதற்கு அலுவலக வேலைகளுக்காக 3 ஆயிரம் தர வேண்டும் என கூறியுள்ளனர்.

நாங்கள் ரேஷன் கடைக்கு வருகிறோம், அலுவலக பணிக்காக 3 ஆயிரத்தை கொடுங்கள் என கேட்டுள்ளனர். இதை நம்பிய லோகம்மாள் அவர்களிடம் 3 ஆயிரத்தை கொடுத்தாராம். தொடர்ந்து லோகம்மாள் ரேஷன் கடைக்கு சென்று கேட்டபோது, அதுபோல எந்த விதமான உதவித்தொகையும் ரேஷன் கடைகளில் வழங்கப்படுவதில்லை என அங்கிருந்த ஊழியர்கள் கூறியுள்ளனர்.

பின்னர், லோகம்மாள் நீண்ட நேரமாக ரேஷன் கடையிலேயே காத்திருந்தார். ஆனால், அங்கு யாரும் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் சோகத்துடன் அங்கிருந்து வீட்டிற்கு சென்றார். இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகொண்டா கோட்டை தெருவை சேர்ந்த முனியம்மாள்(85) என்பவரிடமும் இதுபோன்ற காரணங்கள் கூறி 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் வாங்கி சென்றுள்ளனர். இந்த தகவல் பள்ளிகொண்டா முழுவதும் பரவி வருதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். யாராவது இதுபோல் நயமாக பேசினால் அதனை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: