திருவண்ணாமலையில் சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை

திருவண்ணாமலை, ஜன.28: திருவண்ணாமலையில் சீட்டு நடத்தி பொதுமக்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர். திருவண்ணாமலை புதுத்தெரு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அதே பகுதியில் உள்ள 3வது புதுத்தெருவை சேர்ந்த நபர் ஒருவர் நடத்தி வந்த சீட்டில் ஏராளமானவர்கள் பணம் முதலீடு செய்தனர். சீட்டு முதிர்வடைந்த நிலையில், பணம் செலுத்தியவர்கள் தங்களுக்குண்டான தொகையை திருப்பி தரும்படி கேட்டனர்.

ஆனால் சீட்டு நடத்தி வந்த நபர் பணத்தை திருப்பி தராமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாகியும் சீட்டு கட்டிய நபர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் காலம் கடத்தி வந்த நபர் குறித்து பொதுமக்கள் விசாரித்த போது, இதேபோல் இவரிடம் சீட்டு கட்டிய 40க்கும் மேற்பட்டவர்களுக்கு சீட்டு முதிர்வடைந்தும் பணத்தை திருப்பி தராமல் பல லட்சம் ஏமாற்றி வருவது தெரிய வந்தது.

எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை திருப்பி பெற்றுத்தர கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட எஸ்பி இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்ததாக மனு அளித்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : Thiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலையில் கரும்பு விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம்