கீழ்பென்னாத்தூரில் நுகர்வோர் சங்க சார்பில் கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடக்கம்

கீழ்பென்னாத்தூர், ஜன.28: கீழ்பென்னாத்தூரில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி நேற்று தொடங்கப்பட்டது. கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டான் ஏரி தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரி தூர்வாரப்படாமல் இருப்பதால் அதில் கருவேல மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகப்பட்ச மழை கீழ்பென்னாத்தூர் பகுதியில் பெய்தாலும் ஏரிகளில் மழைநீர் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏரி தூர் வாரப்படாததும், அதிக கருவேல மரங்கள் இருப்பதும் தான் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதனால், ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் மண்டியுள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் மனு அளித்தனர். அதன்படி, பணிகளைச் செய்வதற்காக பணி உத்தரவை நுகர்வோர் பாதுகாப்பு சங்க அமைப்பிற்கு வழங்கப்பட்டது. அதன்படி, கோட்டான் ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்கள், முட்புதர்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணியை நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சுப்பிரமணி நேற்று துவக்கி வைத்தார். இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் நுகர்வோர் சங்க தலைவர் பொன்.சுப்பிரமணி, துணைத் தலைவர் கோ.கோதண்டராமன், செயலாளர் கோ.அண்ணாமலை, துணைச் செயலாளர் க.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Commencement ,removal ,consumer association ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக பழநி...