×

சாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலை, ஜன.28: திருவண்ணாமலையில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்தை எஸ்பி சிபிசக்கரவர்த்தி ெதாடங்கி வைத்தார். திருவண்ணாமலையில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, போலீசார் பங்கேற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் தொடங்கிய ஊர்வலத்தை, எஸ்பி சிபிசக்கரவர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில், ஏடிஎஸ்பி அசோக்குமார், டவுன் டிஎஸ்பி அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற விழிப்புணர்வு ஊர்வலம், பஸ்நிலையம், மாட வீதி, காமராஜர் சிலை, சின்னக்கடை தெரு வழியாக சென்று, அண்ணா நுழைவு வாயில் அருகே நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். முன்னதாக, ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை இயக்கும் போது விபத்து ஏற்பட்டால் எந்த அளவு பாதிப்பு ஏற்படும், உயிரிழப்பு ஏற்படும் என்பதை வீதி நாடகம் மூலம் நடத்தி காட்டினர். அப்போது, ஒரே பைக்கில் மூன்று வாலிபர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கியதைபோல் காட்சியமைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, நகரின் பல்வேறு இடங்களில் நடந்த வாகன தணிக்கையில், ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டிய 73 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Tags :
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...