×

தாட்கோ திட்டங்களில் பயன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

நாகர்கோவில், ஜன.28: தாட்கோ திட்டங்களில் பயன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அறிவித்துள்ளார். குமரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் துரித மின் இணைப்பு திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மானியம் திட்டம், மாவட்ட கலெக்டர் விருப்புரிமை நிதி, மாவட்ட மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி, தாட்கோ தலைவர் விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப்பணி முதன்மைத்தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்டப்பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணையம் தொகுதி -1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, திறன்மேம்பாட்டு பயிற்சி பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு 18 முதல் 65 வரை.

குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சம் ஆகும். தாட்கோ இணையதளம் http://application.tahdco.com மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை படியிறக்கம் செய்தோ, நகலினையோ, கைப்பிரதி விண்ணப்பங்களையோ சமர்ப்பிக்க வேண்டியதில்லை.  விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரர் பற்றிய முழு விவரங்கள், புகைப்படம், இருப்பிடச்சான்றிதழ் எண், சாதி சான்றிதழ் எண், குடும்ப வருமான சான்றிதழ் எண். திட்டங்களின் விவரங்கள் முதலியவற்றை இணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறுவதற்கு 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். இத்தகவலை குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...