நாகர்கோவில் தொழிலாளர் நல வாரியத்தில் 8 ஆயிரம் விண்ணப்பங்கள் தேக்கம் புதுப்பிப்பு, புதிய அட்டைகள் வழங்கும் பணிகள் பாதிப்பு

நாகர்கோவில், ஜன.28 : நாகர்கோவிலில் உள்ள தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களுக்கான புதிய அட்டைகள் மற்றும் புதுப்பிப்பு அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. போதிய பணியாளர்கள் இல்லாமல் அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். கட்டுமானம், ஆட்டோ ஓட்டுனர், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்பட 17 நல வாரியங்கள்  தொழிலாளர் நல அலுவலகத்தின் கீழ் (சமூக பாதுகாப்பு திட்டம்) செயல்பட்டு வருகிறது. நாகர்கோவில் கோணத்தில் ஒருங்கிணைந்த தொழிலாளர் நல அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் கல்வி உதவி தொகை, திருமண நிதி உதவி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த அலுவலகத்தில் தற்போது போதிய பணியாளர்கள் இல்லாத நிலை உள்ளது. இதனால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், அடையாள அட்டை புதுப்பிப்பு போன்ற பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளன. தினமும் ஏராளமான தொழிலாளர்கள் நல வாரிய அலுவலகத்துக்கு வந்து பணி முடிவடையாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள். இதுவரை 8 ஆயிரம் விண்ணப்பங்கள் பரிசீலனை என்ற அடிப்படையில் உள்ளதாக கூறப்படுகிறது. நல வாரிய பணிகள் என்பது மிகவும் முக்கியமானதாகும். அடையாள அட்டை வழங்கினால் தான், தொடர்ந்து உதவி தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க முடியும். எனவே தாமதம் இல்லாமல் நல வாரிய அட்டைகள் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து குமரி மாவட்ட ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பொன்னுலிங்க ஐயன் கூறுகையில், தொழிலாளர் நல வாரியத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. நல வாரிய உறுப்பினர்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் தேக்கம் அடைந்துள்ளன. தற்போது 2 மாதங்களாக தொழிலாளர்கள் அலைந்து வருகிறார்கள். கடந்த 13ம் தேதி புதுப்பித்தலுக்கான உறுப்பினர் அட்டை வழங்குவோம் என கூறி உள்ளனர். பின்னர் பொங்கல் விடுமுறை முடிந்து 20ம்தேதி என கூறி உள்ளனர். அப்போதும் வழங்காமல் 23ம் தேதி வாருங்கள் என கூறி உள்ளனர். 23ம்தேதி சென்றால், தற்போது மறு தேதி குறிப்பிடும் வரை உறுப்பினர்கள் அலைய வேண்டாம் என எழுதி வைத்துள்ளனர். தொழிலாளர் நல வாரியம் என்பது மிகவும முக்கியமானதாகும். எனவே இங்கு போதிய பணியாளர்களை அரசு நியமித்து, உடனுக்குடன் தொழிலாளர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுக்கான உதவி தொகைகள் மற்றும் உறுப்பினர்கள் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : labor welfare board ,Nagercoil ,
× RELATED தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு...