×

அரசு பள்ளியை திறக்க தாமதம் தலைமையாசிரியரை கண்டித்து பெற்றோர்கள் திடீர் முற்றுகை

ஆவடி, ஜன. 28: ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியை திறக்க தலைமையாசிரியர் வராததை கண்டித்து மாணவர்களுடன் சேர்ந்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் காலனியில் அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 21 மாணவ - மாணவிகள் பயில்கின்றனர். இங்கு ஒரு தலைமையாசிரியர் உள்பட இருவர் பணியாற்றி வருகின்றனர். இங்கு தலைமையாசிரியராக உமர் வகிதா பாத்திமா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், பள்ளிக்கூடத்தை தினமும் சரியான நேரத்தில் வந்து திறப்பதில்லை. மேலும்,  பாடங்களை மாணவர்களுக்கு சரிவர கற்று கொடுப்பதில்லை என பொதுமக்கள் சார்பில் புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தன.
இந்நிலையில், நேற்று காலை 9 மணிக்கு திறக்க வேண்டிய பள்ளிக்கூடத்தை தலைமையாசிரியர் வந்து திறக்கவில்லை. இதனையடுத்து மாணவர்கள் பள்ளிக்கூடத்தின் வாசல் முன்பு காத்துக்கிடந்தனர். இதுகுறித்து பெற்றோர்களுக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் 25க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டுவந்தனர். பின்னர், அவர்களும் மாணவர்களும் சேர்ந்து பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்தனர். மேலும், தகவலறிந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், “குடியரசு தினத்தன்று பள்ளியில் கொடி ஏற்றுவதற்கு தலைமையாசிரியர் உமர் வகிதா பாத்திமா வரவில்லை. மேலும், அவர் தினமும் பள்ளிக்கூடத்தை சரியான நேரத்தில் வந்து திறப்பதில்லை. அவர் வரும் வரை மாணவ-மாணவிகள் பள்ளிக்கூட வாசல் முன்பு காத்துக்கிடக்கின்றனர். மேலும், அவர் மாணவர்களுக்கு சரியாக பாடங்களை சொல்லித் தருவதில்லை. மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களை விநியோகம் செய்யாமல் உள்ளார். பள்ளியில் புதிய மாணவர்களை சேர்க்க மறுக்கிறார். இதனால் பள்ளியில் சேர்க்கை நடைபெறாமல், குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளனர்.

மேலும், முக்கிய பதிவேடுகள், மோட்டார் அறை உள்ளிட்ட சாவிகளை பூட்டி எடுத்துச் செல்கிறார்” என குற்றம்சாட்டினர்.  இதன்பிறகு, மாற்று சாவி மூலம் பள்ளிக்கூடம் நேற்று காலை 11 மணியளவில் திறக்கப்பட்டு மாணவர்கள் உள்ளே சென்றது குறிப்பிடத்தக்கது. பள்ளிக் கூடத்துக்கு தலைமையாசிரியர் வராததை கண்டித்து மாணவர்களுடன், பெற்றோர்களும் சேர்ந்து போராட்டம் நடத்தியது திருமுல்லைவாயில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Parents ,opening ,state school ,
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு