3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டும் ஆமை வேகத்தில் ரேடியல் சாலை விரிவாக்க பணி

பல்லாவரம், ஜன.28: பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து துரைப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையை இணைக்கும் வகையில் ரேடியல் சாலை அமைந்துள்ளது. பல்லாவரம் மார்க்கத்தில் இருந்து மேடவாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, தரமணி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல், மேற்கண்ட பகுதிகளில் இருந்து பல்லாவரம், விமான நிலையம், தாம்பரம் மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். குறிப்பாக, ராஜிவ்காந்தி சாலையில் ஏராளமான ஐ.டி நிறுவனங்கள் உள்ளதால், அவற்றில் பணிபுரியும் நூற்றுக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருவதால், இச்சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. இதையடுத்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இதற்கான பணிகள் தொடங்கியது. இந்த சாலை பல்லாவரத்தில் இருந்து ஈச்சங்காடு சந்திப்பு வரை பல இடங்களில் தரை மட்டத்தில் இருந்து 10 அடிக்கு மேல் உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால், விரிவாக்க பணிக்காக சாலையின் இருபுறமும் மண் கொட்டும் பணி நடைபெற்று வந்தது. தொடர்ந்து சாலையின் குறுக்கே ஆங்காங்கே உள்ள மழைநீர் கால்வாய்களையும் விரிவாக்கம் செய்யும் பணி நடந்தது.

இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் போன்றவையால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. பின்னர், சமீபத்தில் மீண்டும் பணிகள் தொடங்கி, சாலையின் இருபுறமும் ஜல்லி கொட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், சாலை நடுவில் உள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அகற்றும் பணியும் இதுவரை முடியவில்லை. இதனால், விரிவாக்க பணி முடிவதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆகும் நிலை உள்ளது. தற்போது, ஈச்சங்காடு சந்திப்பில் மேம்பால பணி நடைபெறுவால் நெரிசல் ஏற்பட்டு, ரேடியல் சாலையில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. இதனால், காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘சாலை விரிவாக்க பணிகள் தொடங்கி 3 ஆண்டுகளாகியும் இதுவரை முடியாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பணி நடைபெறும் இடத்தில் சாலையோரம் தடுப்பு கூட இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் இந்த சாலையில் மின் விளக்குகள் சரிவர எரியாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, ரேடியல் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Radial road ,
× RELATED 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டும்...