செங்கல்பட்டு மாவட்ட மகேந்திரா சிட்டியில் புதிய காவல் நிலையம்

செங்கல்பட்டு, ஜன.28: செங்கல்பட்டு மாவட்ட புதிய எஸ்பி அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. தொடர்ந்து எஸ்பி கண்ணன், கோப்புகளில் கையொப்பமிட்டு பணிகளை துவங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கடந்த நவம்பர் 29ம் தேதி செங்கல்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தனி கலெக்டர்,  எஸ்பி நியமிக்கப்பட்டனர். புதிய எஸ்பியாக  கண்ணன் நியமிக்கப்பட்டு, காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகத்திலேயே பணியை செய்தார். புதிய மாவட்டத்திலேயே எஸ்பி அலுவலகம் செயல்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் செங்கல்பட்டு வேதநாராயணபுரம்   பகுதியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி வளாகத்தில், தற்காலிக எஸ்பி அலுவலகம் தேர்வு செய்து, அதற்கான பணிகள் கடந்த 2 மாதங்களாக நடந்து முடிந்தன. இந்நிலையில், தற்காலிக எஸ்பி  அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. எஸ்பி கண்ணன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஏடிஎஸ்பி பாலச்சந்தர், ஏஎஸ்பி சுந்தரவதனம், டிஎஸ்பிக்கள் ரவிச்சந்திரன், கந்தன், மகேந்திரன் உள்பட  போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், எஸ்பி கண்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் செங்கல்பட்டு, வண்டலூர், மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய டிஎஸ்பி அலுவலகம் மாவட்டத்தில் 28 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 3  அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 3 மதுவிலக்கு அமலாக்க தடுப்பு பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன.
எஸ்பி அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு, ஆயுதப்படை, சைபர் கிரைம், நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு, தனிப்படை உள்பட அனைத்து பிரிவுகளும் இன்று (நேற்று) முதல் செயல்படும். காலை 10.30 மணிமுதல் மதியம் 1:30   மணிவரை   பொது மனுக்களிடம் இருந்து மனுக்கள்  பெறப்படும். மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் அணியாமலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த விரைவில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படும். மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களிலும் சிசிடிவி கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளன. மகேந்திரா சிட்டி பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டம் - ஒழுங்கு சம்பந்தமாக பொதுமக்கள் கொடுக்கும் அனைத்து மனுக்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில்  போலி பத்திரிகையாளர்கள்  கண்காணிக்கப்பட்டு  நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் முக்கிய பகுதிகளில் ரோந்து பணிகள் தொடரும் என்றார்.

Tags : Police Station ,Mahendra City ,Chengalpattu ,
× RELATED காவல் நிலையத்தை பெண்கள் முற்றுகை