×

பள்ளி பரிமாற்று திட்ட செயல்பாடு கிராமப்புற பள்ளிக்கு சென்ற நகர்ப்புற பள்ளி மாணவர்கள்

காஞ்சிபுரம். ஜன.28: தமிழ்நாடு ஒருங்கிணைந்த கல்வி மூலமாக பள்ளி பரிமாற்றுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் திறன்களை படைப்பாற்றலை பகிர்ந்துக்கொள்ளும் வகையில்  ஊரகப்பபுற மாணவர்கள் நகர்புற பள்ளிகளுக்கும், அதேபோன்று நகர்ப்புற மாணவர்கள் ஊரகப்புற பள்ளிகளுக்கும் சென்று அங்கு நடைபெறும் பள்ளி மற்றும் கல்வி செயல்பாடுகளை பார்வையிடுவர். அப்பகுதியில் உள்ள சிறப்புகளையும் வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளுக்கும் சென்று சிறப்புகளை அறிந்துக் கொள்வர். இத்திட்டம் காஞ்சிபுரம்  ஒன்றியம் மற்றும் நகராட்சியில் உள்ள நடுநிலை,  உயர்நிலைப் பள்ளிகள் என 36 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள நகர்ப்புற பள்ளியான யாகசாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இருந்து 20 மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை வெரோனிகா மேரி, கணித ஆசிரியை பிரேமலதா ஆகியோர் காஞ்சிபுரம் அடுத்த ஊரகப் பள்ளியான அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்றனர்.

பள்ளிக்கு சென்ற  யாகசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அங்கம்பாக்கம் பள்ளி மாணவர்கள் புலியாட்டம், சிலம்பாட்டம் ஆடியும், பயனுள்ள புத்தகங்கள் மற்றும் ரோஜா மலர் வழங்கியும் வரவேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தணிகை அரசு தலைமை தாங்கினார்.  கணித ஆசிரியை லதா வரவேற்றார். மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி அறிவியல் ஆசிரியர் சேகர் வழிகாட்டுதலில் அங்கம்பாக்கம் மாணவர்கள் 20க்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் அறிவியல் செயல்பாடுகளை உரிய அறிவியல் பொருட்களைக் கொண்டு செய்முறையில் விளக்கினர். ஆங்கில ஆசிரியை குளோரி பாத்திமா பொம்மலாட்ட நிகழ்ச்சி மூலம் ஆங்கிலப் பாடத்தில் மாதிரி வகுப்பு நடத்தினார். விடுதலை போராட்டம் குறித்த வேலு நாச்சியார் நாடகமும் யாகசாலை மாணவர்களுக்கு  விளையாட்டுப் போட்டியும் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் கலைவாணன், பொற்கொடி ஆகியோர் தொகுத்து வழங்கினர். இறுதியில் ஆசிரியர் சீனுவாசன் நன்றிக் கூறினார்.

Tags : school students ,school ,
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்