சர்வாதிகாரி போல் செயல்படுவதாக வட்டார கல்வி அலுவலர் மீது பெண் ஆசிரியை புகார்

திருக்கழுக்குன்றம், ஜன. 28: வட்டார கல்வி அலுவலர் சர்வாதிகாரிபோல் செயல்படுவதாக, பெண் ஆசிரியை புகார் தெரிவித்துள்ளர். திருக்கழுக்குன்றம் வட்டார கல்வி அலுவலர், சர்வாதிகாரி போல் செயல்படுவதாக பட்டதாரி ஆசிரியை மீராபாய், செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது. திருக்கழுக்குன்றம் நால்வர் கோயில்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணி புரிந்தேன். என்னை திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் இருந்து உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு, திருக்கழுக்குன்றம் வட்டார கல்வி அலுவலர் பணியிட மாற்றம்  செய்துள்ளார். இதே திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் என்னை விட இளையவர் உபரி ஆசிரியராக உள்ள நிலையில், மூத்தவரான என்னை பணியிட மாற்றம் செய்தது, பள்ளிக் கல்வித்துறை விதிகளுக்கு முரணானது. மேலும், எனக்கு மிகுந்த மன உலைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது திருக்கழுக்குன்றம் வட்டார கல்வி அலுவலரின் பழிவாங்கும் படலத்தின் உச்சமாகவே உள்ளது. எனவே, எனது பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விதிகளுக்கு மாறாக பணியிட மாற்றம் செய்தது தொடர்பாக ஆசிரியை மீராபாய், நீதிமன்றத்தையும் நாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இதர ஆசிரியர்கள் கூறுகையில், திருக்கழுக்குன்றம் வட்டார கல்வி அலுவலர் தொடர்ந்து ஆசிரியை - ஆசிரியர்கள் மத்தியில் சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறார். இவருக்கு வேண்டப்பட்டவர்கள், வேண்டப்படாதவர்கள் என ஆசிரியர்களுக்கு இடையே இரு அணிகளாக பிரித்து  அரசியல் செய்கிறார். மேலும், கல்வித்துறை உயரதிகாரிகள் மட்டத்திலும், மந்திரி அளவிலும் எனக்கு ஆட்கள் இருக்கிறார்கள். என்னை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டும்படி பேசுகிறார் என்றனர்.

Tags : teacher ,education officer ,dictator ,
× RELATED உடைந்து நாசமான சோலார் மின் தகடு