பாழடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக ரேஷன் கடை கட்டித் தரவேண்டும்

மாமல்லபுரம், ஜன. 28: மாமல்லபுரம் அருகே சேதமடைந்த ரேஷன்கடையை அகற்றிவிட்டு புதிதாக ரேஷன்கடை கட்டித்தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் மணமை ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மலைமேடு, சிவராஜபுரம், லிங்கமேடு ஆகிய கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மலைமேடு கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மணமை ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கண்ட 3 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மலைமேடு பகுதியில் ஒரு ரேஷன்கடை கட்டப்பட்டது. இந்த கடையில், தங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த கட்டிடத்தை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், கட்டிடத்தின் பல பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுகின்றன. மேலும், அதன் கம்பிகள் வெளியே தெரியும் அளவில் ஒரு காட்சிப் பொருளாக காணப்படுகிறது. இதனால், கிராம மக்கள் அங்கு சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு அச்சப்படுகின்றனர்.

பழமையான கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் அங்கு உயிர் பயத்துடன் சென்று வருகின்றனர். இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும், அதிகாரிகளை நேரில் அணுகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் சரமாரியாக குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை ஒரு முக்கிய பிராதன சாலையாக விளங்குகிறது. இந்த சாலையை ஒட்டி மணமை ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மலைமேடு, சிவராஜபுரம், லிங்கமேடு ஆகிய பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதையொட்டி, மலைமேடு பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன் ஒருரேஷன் கடை கட்டப்பட்டது. இதனை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் அந்த கட்டிடத்தின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளன. இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சேதமடைந்துள்ள ரேஷன் கடையை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்றனர்.

Tags : ration shop ,building ,
× RELATED நரிக்குடி அருகே வி.கரிசல்குளத்தில்...