முதல்வர் வருகைக்காக தூய்மை பணியில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளி மயங்கி விழுந்து சாவு: அரும்பாக்கத்தில் பரபரப்பு

சென்னை: அயனாவரம் டாக்டர் அம்பேத்கர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் மேரி (45). இவர் அரும்பாக்கத்தில் உள்ள 8வது மண்டலம், 105வது வார்டுக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக சுமார் 4  ஆண்டுகளாக துப்புரவு பணி செய்து வந்தார்.இந்நிலையில், அரும்பாக்கம் ரசாக் கார்டன் தெருவில் நேற்று முன்தினம் முதல்வர் வருகைக்காக ஆயத்தப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, அங்கு தூய்மை பணியில் ஈடுபட்ட மேரி திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த  சக ஊழியர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மேரியை பரிசோதித்து பார்த்த டாக்டர், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார். இது குறித்து அரும்பாக்கம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே, இறந்த மேரியின் உறவினர்கள் சுமார் 20க்கும் மேற்ப்பட்டவர்கள் அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று, உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மேரியின் வாரிசுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், என வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததால், அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : cleaning worker ,cleanup ,
× RELATED துப்புரவு தொழிலாளிக்கு பாலியல் தொல்லை