10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவருக்கு பரிசு: தாம்பரம் நகராட்சி ஆணையர் அறிவிப்பு

தாம்பரம்: தாம்பரம் நகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றால் ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்படும் என நகராட்சி ஆணையர் கருப்பையா ராஜா தெரிவித்தார்.தாம்பரம் நகராட்சியில் 71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நகராட்சி ஆணையர் கருப்பையா ராஜா தேசிய கொடி ஏற்றினார். விழாவில், நகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட  உபகரணங்கள் அடங்கிய பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, நகராட்சி சொத்து வரி வசூலில் சிறப்பாக செயல்பட்டு தமிழக அரசின் ஊக்கத்தொகை பெற்றதற்காக நகராட்சி மேலாளர் மேகலா, வருவாய் அலுவலர் கருமாரியப்பன் ஆகியோருக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் நகராட்சி ஆணையர் பேசுகையில், ‘‘தாம்பரம் நகராட்சி பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு எழுதி முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் பரிசும், இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு  ரூ.10 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500ம் ரொக்க பரிசு தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக வழங்கப்படவுள்ளது. மாணவ மாணவிகள் நன்றாக படித்து உத்வேகத்துடன் இந்த பரிசு தொகையை வெல்ல  வேண்டும்,’’ என்றார்.

Tags : student ,Tambaram Municipal Commissioner ,general election ,
× RELATED வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு