சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 2 மாதத்தில் 260 டைல்ஸ் சேதம்

சென்னை: சென்னையின் மிகப்பெரிய மெட்ரோ ரயில் நிலையமான சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 260க்கும் மேற்பட்ட டைல்ஸ் உடைந்து சேதம் அடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.  இதேபோல், அண்ணாநகர், சென்ட்ரல் ஆகிய நிலையங்களில் 4 அலங்கார கண்ணாடிகள் திடீரென கீழே விழுந்துள்ளன. இதனால், பயணிகள் பீதியுடன் வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.   இதுகுறித்து மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் கூறியதாவது:  சென்னை சென்ட்ரல், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர், திருமங்கலம் உள்ளிட்ட நிலையங்களில் கடந்த 2 மாதமாகவே டைல்ஸ் அதிக அளவில் உடைந்துள்ளது. அதிகபட்சமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுவரில்  ஒட்டப்பட்டிருந்த 260 டைல்ஸ் உடைந்துள்ளது. இதுகுறித்து தலைமை அலுவலகத்திற்கு ஊழியர்கள் தரப்பில் இருந்து இ-மெயில் மூலம் புகார் அனுப்பப்பட்டது.

ஆனால், இதை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சேதமடைந்த டைல்ஸ் குறித்தும், சுவர்களை சோதனை செய்யவும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், தானியங்கி படிக்கட்டு அருகில் உள்ள  சுவர்களில் அதிக அளவில் டைல்ஸ் உடைகிறது. இதுகுறித்து பயணிகளும் வாய்மொழியாக புகார் தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்திலும் சுவரில் இருந்த பெரிய அளவிலான டைல்ஸ் ஒன்று திடீரென கீழே விழுந்தது. எனவே, இதை உடனடியாக சரிசெய்து, தரத்தில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பது குறித்தும்  ஆய்வு செய்து நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.  இவ்வாறு கூறினர்.

Related Stories: