போக்சோ சட்டத்தில் கைதாவதை தடுக்க நாயை விட்டு பெண் இன்ஸ்பெக்டரை ஓடஓட விரட்டிய குற்றவாளி கைது: வில்லிவாக்கத்தில் பரபரப்பு

அண்ணாநகர்: வில்லிவாக்கத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்ய சென்றபோது, நாயை அவிழ்த்துவிட்டு பெண் ஆய்வாளரை ஓட ஓட விரட்டியடித்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.  சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (எ) பாபு (42). ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவர், தனது 17 வயதுக்கு உட்பட்ட மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால்,  பயந்துபோன  சிறுமி,  இதுபற்றி தனது தாயாரிடம் கூறி அழுதாள்.

இதையடுத்து, சிறுமியின் தாய், இதுபற்றி வில்லிவாக்கம்  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எனது கணவர் பிரகாஷ்,  பெற்ற மகள் என்றும் பாராமல்  பாலியல் தொல்லை தொல்லை கொடுத்துள்ளார்.

இதை தட்டிக்கேட்ட எனக்கு மிரட்டல் விடுக்கிறார். இதனால், அச்சத்துடன் வசித்து வருகிறோம்.  எனவே எனது கணவர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு  அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய சிறுமியின் தந்தை பிரகாஷை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது கார், வீட்டிற்கு  முன் நிறுத்தப்பட்டிருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில், பிரகாஷ் வீட்டிற்கு வந்திருக்கக்கூடும் என கருதி, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் பெண் ஆய்வாளர் உமாமகேஸ்வரி தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை 4 மணியளவில்  சம்பவ இடத்துக்கு சென்றனர்.அப்போது,  வீட்டின் மேல்தளத்தில் பிரகாஷ் இருப்பது தெரிந்தது. அவரை பிடிக்க படிக்கட்டு வழியாக சென்றனர். இதையறிந்த பிரகாஷ், கீழ் தளத்தில் இருந்த தனது வளர்ப்பு நாயை ஏவி, பெண் ஆய்வாளரை கடிக்கும்படி உத்தரவிட்டார்.

இதனால், பெண் ஆய்வாளரை உள்ளே விடாமல் அந்த நாய் ஓட ஓட விரட்டியது. இதனால் பிரகாஷை கைது செய்ய முடியாமல் சுமார் ஒரு மணி நேரமாக  திணறினர். பின்னர், போலீசார் இதுபற்றி வில்லிவாக்கம் தீயணைப்பு நிலைய  வீரர்களுக்கு தகவல்

அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி நாயை சுருக்கு கயிறு போட்டு பிடித்தனர். இதையடுத்து போலீசார் பிரகாஷை கைது செய்ய மேல் மாடிக்கு சென்று கதவை தட்டினர். ஆனால் பிரகாஷ் வெகு நேரமாக கதவு திறக்கவில்லை. இதையடுத்து, போலீசார் கதவை உடைத்து பிரகாஷை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர்,  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: