சுரண்டை பகுதியில் ரூ.200 கள்ளநோட்டு புழக்கம்?

சுரண்டை, ஜன. 24:  சுரண்டை பகுதியில் ரூ.200 கள்ளநோட்டுகள் புழங்குவதாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் தகவலால் மக்கள் பீதியடைந்து உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக நகரம், சுரண்டை. விவசாயம் மற்றும் பீடி சுற்றுதல் முக்கிய தொழிலாகும். வியாபார நிறுவனங்கள் நிறைந்த சுரண்டையில் ரூ.200 கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாக தகவல் பரவி வருகிறது. பீடி சுற்றும் பெண்கள், மகளிர் சுய உதவி குழுவினரை குறிவைத்து கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.2 ஆயிரம், 500 மற்றும் 100 ரூபாய் மட்டுமே எடுக்கவோ, டெபாசிட் செய்யவோ முடியும். ரூ.200 நோட்டுகளை செலுத்த முடியாது. இந்த நோட்டுகள், மக்களின் கைகளில் மட்டுமே புழங்கும் என்பதால் சமூக விரோத கும்பல் எளிதாக புழக்கத்தில் விட்டிருக்குமோ என்ற பீதியும் நிலவுகிறது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, ரூ.200 கள்ள நோட்டுகள் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்ல, என்றனர். வங்கி அதிகாரிகளும் இதே பதிலைத்தான் கூறினர். ரூ.200 கள்ள நோட்டுகள் தொடர்பான வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். ஆதாரமின்றி சமூக வலைதளங்களில் தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: