ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பூ மார்க்கெட் இடிக்கும் பணி துவங்கியது

திருப்பூர், ஜன.24: திருப்பூரில், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் ஒன்றான பூ மார்க்கெட்டை தரம் உயர்த்துவதற்காக, பழைய கடைகளை இடிக்கும் பணி நேற்று துவங்கியது. திருப்பூர் ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் திருப்பூர் டவுன்ஹால், தென்னம்பாளையம் மார்க்கெட், பூ மார்க்கெட், முத்துப்புதூர் பள்ளி ஆகியவை இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பூர், பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஈஸ்வரன் கோயில் வீதியில் பல ஆண்டு காலமாக பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது.

இந்த பூ மார்க்கெட்டில் மொத்தம் 98 பூக்கடைகள் உள்ளது. கடைகளில் மொத்த, சில்லரை பூ வியாபாரம் நடந்து வந்தன. திருப்பூர் மாநகரம் முழுவதற்கும் இங்கிருந்துதான் பூக்கள் சப்ளை செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான பூ மார்க்கெட் கடைகள் புதிதாக பூ மார்க்கெட் கட்டுவதற்காக எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ஏற்கனவே பழைய பூக்கடைகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், பூ வியாபாரிகள் காலி செய்ய மறுத்தனர். பின்னர், மாநகராட்சி அதிகாரிகள் பூ மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த கட்டண கழிப்பிடத்தை பூட்டி வைத்ததுடன் குடிநீர் இணைப்பையும் துண்டித்தனர். இதனால் பூ மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். நல்ல நிலையில் இருக்கும் இந்த பூ மார்க்கெட் வளாகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பூ மார்க்கெட் வியாபாரிகள் திருப்பூர் எம்.பி. சுப்பராயன் தலைமையில் கூட்டம் நடத்தி மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் மனு அளித்தனர். பின்னர், கடந்த 10ம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி. இயந்திரத்துடன்  பூ மார்க்கெடை இடிக்க முயற்சி செய்தனர். அப்போது, பூ மார்க்கெட் வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்து சுமார் 200 க்கும் மேற்பட்டோர் காமராஜ் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற தெற்கு போலீஸ் உதவி கமிஷ்னர் நவீன் குமார், மாநகராட்சி உதவி பொறியாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் கலைந்து சென்றனர். அதையடுத்து, பூ வியாபாரிகள் அனைவரும் பொங்கல் வியாபாரத்தை முடித்த பின்பு காலி செய்வதாக கூறி கால அவகாசம் கேட்டுக்கொண்டனர். பின்னர், மாநகராட்சி அதிகாரிகள் கால அவகாசம் வழங்கினார்கள். நேற்று காலை மாநகராட்சி உதவி கமிஷ்னர் சபியுல்லா தலைமையில், ஏராளமான போலீசார் பூ மார்க்கெட் கடைகளை காலி செய்ய அறிவுறுத்தி பொக்லைன்  இயந்திரங்களுடன் வந்து பூ மார்க்கெட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். கடையில் இருந்த பொருட்களை வியாபாரிகள் காலி செய்து பழைய பஸ் நிலையம் அருகில் காட்டன் மார்க்கெட்டிற்குள் சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது பூ மார்கெட் முகப்பு பகுதியில் செல்வ விநாயகர்  கோவிலுக்கு அருகில் உள்ள 7  கடைகள் மட்டும் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமானது என்பதால் தொடர்ந்து செயல்பட்டு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் சக்திவேல் கூறியதாவது: திருப்பூர், ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட்டில் மொத்தம் 98 கடைகள் செயல்பட்டு வந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூ மார்க்கெட் இடிக்கப்பட்டு புதியதாக கட்டப்படவுள்ளது. ஆகையால், எங்களுக்கு திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தற்காலிகமாக 89 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு சுகாதார சீர்கேடு மிகுதியாக உள்ளது. சாக்கடை கழிவுகள் தேங்கி நிற்கிறது, புதர் மண்டி கிடக்கிறது. இவற்றை சுத்தம் செய்து தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 1 வருட காலத்திற்குள் புதிய கடைகளை கட்டி கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகையால், அதுவரை பூ மார்க்கெட் காட்டன் வளாகத்தில் செயல்படும் என்றார்.

Related Stories: