×

பழைய ஆயக்கட்டு பகுதிக்கு பிப்ரவரி முதல் கூடுதல் தண்ணீர் திறந்து விடக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை

தாராபுரம்.ஜன.24: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளான தாராபுரம், தளவாய்பட்டினம், கொழிஞ்சிவாடி, குளத்துப்பாளையம் உள்ளிட்ட 4 அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன கால்வாய்கள் செயல்பாட்டில் உள்ளன. தற்போது சுமார் 18 ஆயிரம் ஏக்கர்களில் சம்பா நெல் மற்றும் குருவை சாகுபடி செய்யப்பட்டு, கதிர்கள் விளைந்து பால் பிடிக்கும் நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன கால்வாயில் கடைசி நனைப்புக்கான தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள்  நாளை (25ம் தேதி) முதல் 31ம் தேதி வரை திறந்துவிட உள்ளனர். இந்நிலையில் 4 பாசன கால்வாய்களின் சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகள் நேற்று தாராபுரம் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

நெற்பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளதாலும், ஏற்கனவே விளைநிலங்களில் தண்ணீரின் ஈரப்பதம் அதிகமாக உள்ளதாலும் தற்போது கடைசி நனைப்புக்கான தண்ணீரைத் திறந்து  விடுவதால் கூடுதல் பலன் எதுவும் இல்லை. முறைப்படி அதிகாரிகள் 25ம் தேதி  தண்ணீர் திறந்து விட்டாலும் அது கடைமடை பகுதியான கரூர் பகுதி விவசாயிகளுக்கு தான் பலன் தரும். தங்களுக்கு பலன் தர வேண்டுமென்றால் 31ம் தேதிக்கு பின் பிப்ரவரி முதல் தேதியிலிருந்து தொடர்ந்து 4 நாட்களுக்கு கூடுதல் பாசன நீர் கிடைத்தால் மட்டுமே நெற்பயிர்கள் நன்கு விளைந்து முழுமையான பலனை விவசாயிகளுக்குத் தரும். எனவே அதிகாரிகள் தங்களது உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி பிப்ரவரி 1ம் தேதி முதல் குறைந்தபட்சம் 5 தேதி வரை கூடுதலாக பாசன நீரை திறந்து விட வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை உயரதிகாரிகளுடன் கலந்து பேசி, பரிசீலனைக்கு வைக்க உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதையடுத்து பாசனப் பகுதி விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Tags : opening ,Public Works Office ,township ,
× RELATED கே.வி.குப்பம் அருகே வீட்டின் வெளியே நிறுத்திய பைக் திருட்டு