×

திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டல பாசனத்துக்கு 27ம் தேதி தண்ணீர் திறப்பு

உடுமலை, ஜன. 24: திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டல பாசனத்துக்கு 27ம் தேதி  தண்ணீர் திறக்கப்படுகிறது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார்பதி மின் நிலையம் வழியாக, காண்டூர் கால்வாய் மூலம் அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. இதன்மூலம் பிஏபி பாசனத்தில்,  கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.75 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. நான்காவது மண்டல பாசனம் சமீபத்தில் நிறைவு பெற்றது. இதையடுத்து, முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கருத்துரு அனுப்பினர்.

இதையடுத்து, 27ம் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடும்போது, அணையின் சுவர்களை வெள்ளை அடித்து பொலிவுபடுத்துவது வழக்கம். அதன்படி, அணையின் சுவர்களிலும், திருமூர்த்தி அணை என்று எழுதப்பட்ட எழுத்துக்களிலும் வெள்ளை அடிக்கும் பணி நடந்து வருகிறது. அணையில் தற்போது 45.21 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. நீர்வரத்து 660 கனஅடி. 29 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags : Thirumurthi Dam ,
× RELATED மண் மேடாக காட்சி அளிக்கும் கிழக்கு...