பாத்திர தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு பேச்சுவார்த்தை 27ம் தேதி நடக்கிறது

திருப்பூர், ஜன.24: திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில், 300க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. இவற்றில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பாத்திர தொழிலாளர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சம்பள ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவு பெற்றது. அதனால், கூலி உயர்வு வழங்க உற்பத்தியாளர் சங்கத்தை கேட்பது என முடிவு செய்யப்பட்டு, உற்பத்தியாளர் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இச்சூழலில், எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.  சங்க தலைவர் ராயப்பன், தலைமை வகித்தார். செயலாளர் கதிரேசன், பொருளாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் குமாரசாமி, துணைச் செயலாளர் துரைசாமி உட்பட பலர் பங்கேற்றனர். இதில், 27-ம் தேதி கூலி உயர்வு குறித்து, பேச்சு நடத்த தொழிற்சங்க கூட்டு கமிட்டியை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

Related Stories: