×

வறட்சி எதிரொலி வனப்பகுதிகளில் காட்டு தீ பரவும் அபாயம்

மஞ்சூர், ஜன.24:வறட்சியால் எல்லையோர பகுதிகளில் காட்டு தீ அபாயம் உள்ளதையடுத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கிண்ணக்கொரை. தமிழக-கேரள மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியை சுற்றிலும் இரு மாநிலத்திற்கு சொந்தமான அடர்ந்த காடுகள் உள்ளது. இவற்றில் விலை உயர்ந்த மரங்கள் மற்றும் நெல்லிக்காய், கடுக்காய் போன்ற மருத்துவ குணம் கொண்ட மரங்களுடன் ஏராளமான வனவிலங்குகளும் வசிக்கின்றன. கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் பனியின் தாக்கத்தால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் வறட்சியால் மரம், செடி, கொடிகள், புல்வெளிகள் காய்ந்து கருகி வருகிறது. வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளும் வறண்டு போயுள்ளது. இதனால் குடிநீர் மற்றும் இரைகளை தேடி வனவிலங்குகள் இடம் பெயர துவங்கியுள்ளன.

மேலும் வறட்சியால் வனப்பகுதிகளில் காட்டு தீ பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இப்பகுதிகளில் வறட்சியின் காரணமாக பெரிய அளவில் காட்டு தீ ஏற்படுவது வாடிக்கையாக உள்ள நிலையில், நடப்பாண்டு காட்டு தீ பரவலை தவிர்க்க இரு மாநில வனத்துறையினரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக எல்லையை சுற்றிலும் வனப்பகுதிகளில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கவும், வனப்பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்திற்கும், கால்நடை மேய்ச்சலுக்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் அடுப்புகளை மூட்டி சமையல் செய்தல் உள்ளிட்டவைகளாலும் காட்டு தீ பரவ வாய்ப்புள்ளதால் வேட்டை மற்றும் தீத்தடுப்பு காவலர்கள் மூலம் வனப்பகுதிகளை ஒட்டிய சாலையோரங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பந்தலூர்:பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகம் சேலக்குன்னு பகுதியில் வனத்துறை சார்பில் வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தற்போது இரவு முழுதும் பனியும் மதிய நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோடை காலம் நெருங்கி வருவதால் கூடலூர் வனக்கோட்டம் பகுதியில் தீ ஏற்படாமல் பாதுகாப்பதற்காக பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட சேலக்குன்னு வனப்பகுதியில் எதிர் தீ வைத்து தீத்தடுப்பு கோடு அமைக்கும் பணியை துவங்கப்பட்டுள்ளது. பிதர்காடு வனச்சரகர் மனோகரன் மேற்பார்வையில் வனக்காப்பாளர் ராஜேஷ்குமார் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் தீத்தடுப்பு கோடு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இப்பணிகள் மூலம் கோடைக்காலங்களில் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்படாமல் தடுக்க உதவும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...