×

ஜன்னலில் எட்டி பார்க்கும் சிறுத்தை சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவால் கிராம மக்கள் பீதி

ஊட்டி, ஜன.24: நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி வனங்களையும், தேயிலை தோட்டங்களையும் கொண்டுள்ளது. இதனால், இங்கு வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிறுத்தை மற்றும் காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இவைகள் மக்கள் வாழும் பகுதிகளை முற்றுகையிட்டுள்ளன. சிறுத்தைகள் மக்கள் வளர்க்கும் ஆடு, மாடு மற்றும் இதர வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வருகின்றன. இந்நிலையில், இதனை பயன்படுத்திக் கொண்டு சிலர் சமூக வலைத்தளங்களில் வேறு நாடுகள் மற்றும் வேறு மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகளின் வீடியோக்களை எடுத்து நீலகிரி மாவட்டத்தில் நடந்ததாக பதிவிடுகின்றனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஊட்டி அருகேயுள்ள ஆர்குச்சி கிராமத்தில் ஒரு சிறுத்தை சாலையில் நடந்துச் செல்வதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். மேலும் வீடியோவை எடுத்த இளைஞர்கள் படுகு மொழியில் பேசுவதும் அந்த பதிவில் இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இதனை பலரும் பார்த்தனர்.

இந்நிலையில், இலங்கையில் ஒரு வீட்டின் ஜன்னல் அருகே ஒரு சிறுத்தை வரும் வீடியோ தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் சிங்கள மொழியில் பேசுவது தெளிவாக பதிவாகியுள்ளது. ஆனால், அதனை கூட எடிட் செய்யாத சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். ேமலும், அந்த வீடியோ நீலகிரி மாவட்டம் ஆருகுச்சி கிராமத்தில் எடுக்கப்பட்டதாக பதிவிட்டுள்ளனர். இதனை சற்றும் ஆராயாமல் ஒரு தனியார் தொலைக்காட்சியும் செய்தியாக வெளியிடவே, இதனை பொதுமக்கள் நம்பிவிட்டனர். இதனால், ஆர்குச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் சிறுத்தை பீதியில் மூழ்கியுள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், அந்த வீடியோ பதிவை நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில் வேறு பகுதியில் எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆர்குச்சி கிராமத்தில் இது போன்று குடியிருப்பிற்குள் சிறுத்தை வந்ததாக தகவல் வரவில்லை. எனவே, பொதுமக்கள் இது போன்று வதந்திகளை நம்ப வேண்டாம், என்றனர்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...