×

கக்குச்சி அருகே பிடிபட்ட கரடி அப்பர் பவானியில் விடுவிப்பு

ஊட்டி,ஜன.24: ஊட்டி  அருகேயுள்ள கக்குச்சி பகுதியில் பிடிக்கப்பட்ட கரடியை, வனத்துறையினர் ரகசியமாக  அப்பர்பவானி கொண்டு சென்று விடுவித்தனர். வனப்பரப்பு அதிகமுள்ள நீலகிரியில் புலி,  சிறுத்தை, காட்டுமாடுகள், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள்  உள்ளன. நீலகிரியில் வன விலங்குகள் கணிசமாக அதிகரித்துள்ளன. ஆனால் அதற்கேற்ப  வனப்பரப்பு இல்லாததால் வன விலங்குகள் ஊருக்குள் புகக்கூடிய சூழல் நிலவி  வருகிறது. குறிப்பாக நீலகிரி வன கோட்டத்தில் வனத்தை ஒட்டியுள்ள கிராம  பகுதிகளில் காட்டுமாடுகள் மற்றும் கரடி நடமாட்டம் இருந்து வருகிறது.  குறிப்பாக கிராமப்புறங்களுக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் கரடிகளை  வனத்துறையினர் கூண்டு வைத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுகின்றனர். கடந்த  ஆண்டு செப்டம்பர் மாதம் கோத்தகிரி அருகேயுள்ள எஸ்.கைகாட்டி பகுதியில்  குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி, மஞ்சூர் அருகே கண்டி பகுதியில்  பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி ஆகியவற்றை கூண்டு வைத்து பிடித்து  அப்பர்பவானி வனத்தில் விடுவித்தனர். இதனிடையே கட்டபெட்டு  வனச்சரகத்திற்குட்பட்ட கக்குச்சி பகுதியில் கரடி ஒன்று உலா வருவதாகவும்,  இதனை பிடித்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்ததாக  கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது.

இந்த  கூண்டில் நேற்று முன்தினம் கரடி சிக்கியுள்ளது. கரடி சிக்கிய தகவலை  வெளியில் தெரியாமல் வனத்துறையினர் பார்த்து கொண்டனர். யாரையும் செல்போனில்  புகைப்படம் எடுக்க கூட அனுமதிக்கவில்லை. தொடர்ந்து பிடிபட்ட கரடியை  ரகசியமாக வனத்துைற வாகனத்தில் ஏற்றி சென்று அப்பர்பவானி வனத்தில்  விடுவித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் தொந்தரவு செய்யும் கரடிகளை பிடிக்கும்  வனத்துறையினர் வழக்கம்போல் அப்பர்பவானியில் விடுவிப்பது வாடிக்கையாக  உள்ளது. தொடர்ச்சியாக அப்பர்பவானியில் விடுவிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு  தெரிவிக்க வாய்ப்புள்ளது. பிடிபட்ட கரடியின் உடலில்  காயம் ஏதேனும் இருந்திருக்க வாய்ப்புள்ளது. அதனை மறைப்பதற்காக கரடியை  ரகசியமாக கொண்டு சென்று விடுவித்திருக்கலாம் என சுற்றுசூழல் ஆர்வலர்கள்  மற்றும் பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதனிடையே மஞ்சூர்  சுற்று வட்டார பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. வேறு பகுதிகளில்  பிடித்து வந்து அப்பர்பவானி வனப்பகுதியில் விடுவிக்கும் கரடிகள் தான்  தற்போது மஞ்சூர் சுற்று வட்டார குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதாக  பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : Bear Upper Kawaii ,Kakuchi ,
× RELATED கக்குச்சி,எப்பநாடு ஊராட்சியில் ரூ.1.72 கோடியில் வளர்ச்சி பணிகள்