ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 960 கனஅடியாக அதிகரிப்பு

பொள்ளாச்சி, ஜன 24: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து, தண்ணீர் திறப்பு வினாடிக்கு 960 கன அடியாக அதிகரித்துள்ளது. கேரளாவுக்கு மட்டும் சுமார் 400கன அடி தண்ணீர் ஆற்று வழியாக செல்வதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.   ஆழியார் அணைக்கு, பீடர் கால்வாய், காடாம்பாறை, அப்பர் ஆழியார், குரங்கு அருவி மற்றும் சிறு நீரோடைகள் வழியாக தண்ணீர் வருகிறது. இந்த அணையிலிருந்து ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர், விவசாயத்துக்கு மட்டுமின்றி குடிநீர் தேவைக்கும் பயன்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட டிஎம்சி தண்ணீர் கேரள பகுதிக்கு திறக்கப்படுகிறது.இதில், கடந்த 2018ம் ஆண்டில் ஜூன் மாதம் முதல் தொடர்ந்து பெய்த தென்மேற்கு மழையால், ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததுடன், ஜூலை மாதம் இறுதியில் முழு கொள்ளளவை எட்டியது. அதுபோல் கடந்த 2019ம் ஆண்டில், கோடை மழையை தொடர்ந்து தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் வரை அவ்வப்போது,  காடாம்பாறை மற்றும் அப்பர் ஆழியாரிலிருந்து வினாடிக்கு 350 முதல் 400கன அடிவரை தண்ணீர் வரத்து இருந்ததால், டிசம்பர் இறுதி வரை ஆழியார் அணையின் நீர்மட்டம் 110அடிக்கு மேல் காணப்பட்டது. ஆனால் தற்போது, மழையில்லாததால், அணைக்கு தண்ணீர் வரத்து குறைய துவங்கியுள்ளது.  இதில் நேற்றைய நிலவரப்படி, நீர் தேக்க பகுதியிலிருந்து மட்டும் வினாடிக்கு சுமார் 280 கன அடி தண்ணீரே வந்து கொண்டிருந்தது. இதனால், அணையின் நீர் மட்டம் 94 அடியாக உள்ளது. இருப்பினும், அணையிலிருந்து புதிய மற்றும் ஆயக்கட்டு பாசனத்துக்கும்.  குடிநீர் தேவைக்கு மற்றும் கேரள பகுதிக்கு என, கடந்த சில நாட்களாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. நேற்று வினாடிக்கு 960கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதில், கேரளாவுக்கு மட்டும் சுமார் 400கன அடிவீதம் ஆற்று வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பால், ஆழியாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால், ஆங்காங்கே உள்ள தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கி மறுகால் வழியாக பாய்கிறது. அதிலும், ஆனைமலை வழியாக செல்லும் ஆழியாற்றின் ஒரு பகுதியில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் ரம்மியமாக கொட்டுவதால், வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பலரும் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். இருப்பினும், தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஆற்றில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டும் என, பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Related Stories: