சுற்றுவட்டார கிராமங்களில் தென்னையில் மீண்டும் வெள்ளை ஈ தாக்குதல்

பொள்ளாச்சி, ஜன. 24: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் மீண்டும் அதிகரித்துள்ளது. மரத்தை வெட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

 பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தென்னை விவசாயமே பிரதானமாக உள்ளது. கடந்த 2016, 2017ம் ஆண்டில் போதிய மழையில்லாததால் வறட்சி ஏற்பட்டது. அந்த நேரத்தில், தென்னைகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல், காய்ப்பு திறன் மிகவும் குறைவானது. அப்ேபாது, வெள்ளை  ஈ தாக்குதலும் ஏற்பட்டது. இதில் கடந்த 2018ம் ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழைக்கு பிறகு பனிப்பொழிவு இருந்த நேரத்தில், பொள்ளாச்சி பகுதியில் உள்ள தென்னைகளில் வெள்ளை ஈ தாக்கம் மேலும் அதிகமானது. வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். வேளாண்துறை அதிகாரிகள் அவ்வப்போது, தென்னை விவசாயிகளுக்கு, தென்னையில் பரவும் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த சிறப்பு பயிற்சி முகாம் மூலம் அறிவுரை வழங்கினர். மேலும், தோட்டங்களில் நேரடியாக சென்று தென்னை மரத்தை பராமரிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தினர்.

தற்போது, கேரள மாநிலம் எல்லைப்பகுதியில் பொள்ளாச்சியை அடுத்த மணக்கடவு, ஆத்துப்பொள்ளாச்சி, மீனாட்சிபுரம், பெரியபோது, வளந்தாயமரம், தப்பட்டை கிழவன்புதூர் உள்ளிட்ட பல கிராமங்களில் தென்னைகளில் மீண்டும் வெள்ளை ஈ தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை என அடுத்தடுத்து இருந்தாலும், வெள்ளை ஈ தாக்கம் ஏற்பட்ட தென்னைகள் வாடி வதங்கி காய்ந்த நிலையில் உள்ளது. அந்த மரத்தை மீண்டும் செழிப்பதற்கான வழிமுறை மேற்கொள்ளவா அல்லது வெட்டி  விடவா என விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறுகையில், ‘‘தென்னையில் ஏற்படும் வெள்ளை ஈ தாக்குதலால், தேங்காய் மற்றும் இளநீரின் உற்பத்தி குறைந்துள்ளது. ஒரு தென்னையில் வெள்ளை ஈ தாக்கம் இருந்தவுடன், அந்த நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பெரும்பாலான மரங்களில் வெள்ளை ஈ  பரவுவதால், விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்திக்கின்றனர்.இந்த நிலை நீடித்தால் தென்னை மரங்கள் அழிவை நோக்கி சென்றுவிடும். எனவே, வெள்ளை ஈ தாக்குதல் உணடான தென்னை மரங்களை மீட்டெடுக்கும்  வகையில், வேளாண் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: